பீஃப் தடை, 'மது'வுக்கு அனுமதி - பாஜக மூத்த தலைவர் 'முழு' கட்டுப்பாட்டில் லட்சத்தீவுகள்?!

பீஃப் தடை, 'மது'வுக்கு அனுமதி - பாஜக மூத்த தலைவர் 'முழு' கட்டுப்பாட்டில் லட்சத்தீவுகள்?!
பீஃப் தடை, 'மது'வுக்கு அனுமதி - பாஜக மூத்த தலைவர் 'முழு' கட்டுப்பாட்டில் லட்சத்தீவுகள்?!

கேரளத்தின் உச்ச நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை தங்களது வலைதள கணக்கில் நேற்றில் இருந்து #SaveLakshadweep என்ற ஹேஷ்டேக்கை லட்சத்தீவுகள் குறித்து தங்கள் கவலைகளை எழுப்பி வருகின்றனர். அவர்கள் எழுப்பிவரும் புகார்கள் எப்போதும் அமைதியாக, அழகாக காட்சியளிக்கும் லட்சத்தீவுகளில் நிலவிவரும் பிரச்னைகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அப்படி என்னதான் அங்கு பிரச்னை, அந்தப் பிரச்சனைகளுக்கு யார் காரணம் என்பதை விரிவாக பார்ப்போம்.

இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவுகள். கேரளாவில் இருந்து 200 கி.மீ தொலைவில் அரபிக் கடலில் அமைந்துள்ளது இந்த தீவுகள். பலவாறாக பிரிந்திருக்கும் இந்த தீவின் மொத்த மக்கள் தொகை 65,000 பேர். இதில் பெருமளவில் இஸ்லாமிய மக்களே பூர்வகுடிகளாக வாழ்ந்துவருகின்றனர். தமிழ், மலையாள மக்களே மீன்பிடி தொழிலையும், சுற்றுலா தொழிலையும் பிரதான தொழிலாக கருதி பெரும்பாலும் வசித்து வருகின்றனர். அரபிக் கடலில் அமைந்துள்ளதால் மலையாளிகள் அதிக அளவு செல்லும் இடமாகவும் இந்த தீவுகள் அமைந்துள்ளன.

இந்திய யூனியன் பிரதேசமான இந்த தீவுகளை நிர்வகிக்க மத்திய அரசு எப்போதும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளையே நியமித்து வந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரை லட்சத்தீவின் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் ஐ.பி.எஸ் அதிகாரி தினேஷ்வர் ஷர்மா (Dineshwar Sharma). ஆனால் இவர் உடல்நலக்குறைவால் டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மரணமடைந்தார். இதையடுத்து மீண்டும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை நிர்வாகிகளே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக முதல்முறையாக ஓர் அரசியல்வாதி கையில் லட்சத்தீவுகளின் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைத்தது மத்திய அரசு.

அந்த அரசியல்வாதி வேறு யாருமல்ல, குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரபுல் கோடா பட்டேல் (Praful Khoda Patel) என்பவர்தான். இவர், பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகப் பொறுப்பேற்ற பிறகு, பிரபுல் கோடா பட்டேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள்தான் தற்போது லட்சத்தீவு மக்களை கவலைகொள்ள செய்துள்ளதற்கும், கேரள பிரபலங்கள் புகார் கொடுத்துள்ளதற்கும் காரணம். தீவுவாசிகளின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்ல, லட்சத்தீவின் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் அவர் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாக கூறுகிறார் உள்ளூர் மக்கள்.

பிரபுல் பட்டேல் விதித்த கட்டுப்பாடுகள் என்ன?

கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக லட்சத்தீவுகளில் இந்த ஆண்டு ஜனவரி வரை கொரோனா பாதிப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஆனால் பிரபுல் கோடா பட்டேல் தான் பொறுப்பேற்ற பிறகு புதிய கொரோனா நடவடிக்கைகளை அமல்படுத்தினார். அவர் போட்ட விதிமுறைகள்படி, கொரோனா பரிசோதனையின்போது, நெகட்டிவ் என்று வந்தால், 48 மணிநேரத்திற்குள் லட்சத்தீவிற்குள் மக்கள் நுழையலாம். இந்த விதிமுறையால் தற்போது தீவு மக்களின் 6500-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர் மற்றும் 24 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்துள்ள முக்கியப் பிரச்னை லட்சத்தீவு மேம்பாட்டு ஆணையத்தின் வரைவு ஆகும். இந்தப் புதிய வரைவு எந்தவொரு பகுதிகளையும் கையகப்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. வளர்ச்சி திட்டங்களை அதிகப்படுத்த இந்த வரைவு கொண்டுவரப்பட்டுள்ளதாக யூனியன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது 'ரியல் எஸ்டேட் நலன்களுக்கு' இடையூறாக தங்கள் நிலத்தை அபகரிக்கும் முயற்சி என்று தீவு குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், தேவையற்ற நெடுஞ்சாலைகள் மற்றும் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை கட்ட அனுமதித்தால் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் கொண்ட தீவுகள் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று குடியிருப்பாளர்களும் அரசியல் தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுபோக, குறைந்தபட்ச ஊதிய உயர்வு கேட்டு சமீபத்தில் போராட்டம் நடத்திய செவிலியர்களை, அவர்களின் பிரச்னையை கேட்காமல் அதிரடியாக கைது செய்தது அங்குள்ள அரசு. மேலும் இங்கு இதுவரை கொலை, குழந்தை கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படாத நிலையில், பிரபுல் கோடா பட்டேல் தான் பதவியேற்றதும், குண்டாஸ் சட்டத்தை இங்கு அமல்படுத்தியிருக்கிறார்.

இதுதவிர, இதுவரை மதுபானங்களுக்கு தடை இருந்த லட்சத்தீவுகளில் சுற்றுலாவை மையப்படுத்தி மதுபான விற்பனை செய்யலாம் என அறிவித்திருக்கிறார். மதுபானம் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை ஒருதலைப்பட்சமாக நீக்கியது உடன் `பிராணிகள் பாதுகாப்புத் திட்டம்' என்கிற பெயரில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தீவுகளில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விலங்குகள் பாதுகாப்பை மேற்கோள் காட்டி, கடலோரப் பகுதிகளில் கட்டப்பட்ட மீனவர்களின் கொட்டகைகளை இடித்துள்ளது இவரது நிர்வாகம்.

இந்தக் கட்டுப்பாடுகளால் தங்கள் தீவு மக்கள் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர் என தீவுவாசிகள் தங்கள் மனக்குமுறலை சமீபகாலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணமான பிரபுல் கோடா பட்டேல் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கைகளை விடுத்துள்ளனர். இதன்தொடர்ச்சியாகவே, கேரள பிரபலங்கள் பலரும் லட்சத்தீவுகள் குறித்தும், சமீபத்திய நடவடிக்கைகள் குறித்தும் தங்கள் கவலைகளை நேற்று முதல் வெளிப்படுத்தி வருகின்றனர். கேரளாவின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் பாஜகவை தவிர, புதிய நிர்வாகி பிரபுல் கோடா பாய் படேலுக்கு எதிராக, அவருடைய சர்வாதிகார ஆட்சி தீவில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக ஒருமித்த குரலில் அனைவரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிபிஎம் எம்.பி எலமாரம் கரீம் இதுதொடர்பாக விரிவான கடிதம் ஒன்றை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு எழுதி அதில், பிரஃபுல் கே. பட்டேல் உடனடியாக லட்சத்தீவில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ``சீர்திருத்தங்கள் மற்றும் திட்டங்கள் என்ற பெயரில் புதிய நிர்வாகி லட்சத்தீவு மக்களின் பாரம்பரிய வாழ்க்கையை முற்றிலுமாக அழிக்க முயற்சிக்கிறார். தீவில் வாழும் பெரும்பான்மையான மக்களுக்கு மீன்பிடித்தல் முக்கிய வருமான ஆதாரமாகும். கடலோர காவல்படை சட்டத்தை மீறியதன் அடிப்படையில் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் பிற உபகரணங்களை வைத்திருந்த கொட்டகைகள் புதிய நிர்வாகத்தால் இடிக்கப்பட்டன.

சரக்கு போக்குவரத்துக்கு தீவுவாசிகள் இனி பேப்பூர் துறைமுகத்தை நம்பக்கூடாது என்றும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாறாக, இந்த நோக்கத்திற்காக அவர்கள் மங்களூரு துறைமுகத்தை சார்ந்து இருக்க வேண்டும். இந்த முடிவு கேரளாவுடனான லட்சத்தீவின் உறவுகளை துண்டிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று எலமாரம் கரீம் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

இதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்வி ராஜ் இது தொடர்பாக பெரிய பதிவு ஒன்றை வலைதளங்களில் இட்டு தனது கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். எப்போதும் அமைதியும், அழகும் நிறைந்தவாறு காட்சியளிக்கும் லட்சத்தீவுகள் இது போன்ற காரணங்களால் தற்போது பிரச்னைகளை சந்தித்து வருகின்றன.

மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com