அடிப்படை விதியிலேயே கைவைத்த பிரபுல் கோடா பட்டேல்? - தொடரும் லட்சத்தீவு சர்ச்சை!

அடிப்படை விதியிலேயே கைவைத்த பிரபுல் கோடா பட்டேல்? - தொடரும் லட்சத்தீவு சர்ச்சை!
அடிப்படை விதியிலேயே கைவைத்த பிரபுல் கோடா பட்டேல்? - தொடரும் லட்சத்தீவு சர்ச்சை!

லட்சத்தீவுகளில் நிலவிவரும் பிரச்னைகள் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல் அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன. தற்போது லட்சத்தீவுகளின் அடிப்படை விதியை மாற்றும் விதமாக பிரபுல் கோடா பட்டேல் செய்துள்ள மாற்றங்கள் சர்ச்சைக்கு மேலும் உரம்போடும் வகையில் அமைந்துள்ளன.

லட்சத்தீவுகளில் புதிய நிர்வாகி விதித்த மாட்டிறைச்சி தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும், இதனை விதித்த பிரபுல் கோடா பட்டேல் மாற்றப்பட வேண்டும் என்றும் கேரள மாநிலம் போர்க்கொடி தூக்கியிருக்கிறது. புதிய நிர்வாகி பிரபுல் கோடா படேலுக்கு எதிராக, அவருடைய 'சர்வாதிகார ஆட்சி' தீவில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக குரல் எழுப்பியுள்ளதோடு, தற்போது நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். இதனால், இந்த விவகாரத்தில் தொடர்ந்து அமைதியின்மை நிலவி வருகிறது.

இந்த நிலையில், பிரஃபுல் கோடா பட்டேல் லட்சத்தீவுகளின் மாவட்ட பஞ்சாயத்தின் அதிகாரங்களை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாவட்ட பஞ்சாயத்தின் அதிகாரங்களை குறைத்து, முக்கியமான அதிகாரங்களை தீவை நிர்வகிக்கும் அட்மினிஸ்டேட்டரின், அதாவது தனது வரம்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் பிரஃபுல் கோடா பட்டேல்.

இந்தியாவின் பிற யூனியன் பிரதேசங்களை போல சட்டப்பேரவை என்பது அங்கு கிடையாது. லட்சத்தீவுகளில் இருக்கும் உட்சபட்ச அதிகாரம், மாவட்ட பஞ்சாயத்து மட்டுமே. எனவேதான் இதனை குறைக்கும் வகையில் பஞ்சாயத்து ரெகுலேஷன் சட்டத்தை கொண்டுவந்து பஞ்சாயத்தின் அதிகாரத்தில் கைவைத்துள்ளார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதன்மூலம் கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, விவசாயம், சுகாதாரத்துறை, மீன்வளத்துறை என முன்பு பஞ்சாயத்து அதிகாரத்தின் கீழ் இருந்த அத்தனை துறைகளும் தற்போது நிர்வாகியின் அதிகார வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரபுல் கோடா பட்டேலால் பிறப்பிக்கப்பட்டுள்ள இன்னொரு உத்தரவும் சர்ச்சையை சந்தித்துள்ளது. அது, லட்சத்தீவின் அழகை அதிகரிக்கும் சாலை ஓரங்களில் உள்ள அனைத்து தென்னை மரங்களுக்கு காவி வண்ணம் பூசுவது. இந்த உத்தரவை வாய்மொழி உத்தரவாக பிறப்பித்து இருக்கிறாராம். அதன்படி, தென்னை மரங்களுக்கு காவி வண்ணம் பூசும் பணிகள் 'அமைதி'யாக நடந்து வருகிறது எனக் கூறுகிறார்கள் அங்குள்ளவர்கள்.

இதேபோல், தீவுகளில் கடந்த பல ஆண்டுக்களாக கிரிமினல் குற்ற வழக்குகளில் பெரிய அளவில் யாரும் சிறைக்குச் சென்றதில்லையாம். ஆனால், இவர் பொறுப்பேற்றபின் சைக்கிளில் லைட் இல்லாமல் சென்றது முதல் ட்ரிபிள்ஸ் செல்வது வரை அனைத்துக்கும் வழக்கு போடப்படுகிறது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுபவர்களை, தன்னை எதிர்ப்பவர்களை அடக்க குண்டர் சட்டத்தையும் கையிலெடுத்துள்ளார் என்கிறார்கள் தீவுவாசிகள்.

பதவியேற்ற பின் சில நாட்கள் மட்டுமே லட்சத்தீவில் பிரபுல் கோடா பட்டேல் தங்கியிருந்தார் என்றாலும், அவர் பிறப்பித்துள்ள உள்ள உத்தரவுகள் காலம் காலமாக தீரா பிரச்னைகளை உருவாக்குபவை என கேரள பாஜகவை தவிர அந்த மாநிலத்தைச் சேர்ந்த மற்ற அனைத்து கட்சிகளும் புகார் சொல்லியுள்ளன. பதவியேற்ற பின் சில நாட்கள்தான் பிரபுல் கோடா பட்டேல் லட்சத்தீவில் தங்கியிருந்தார். அதன்பின் டாமன் தீவுகளில் இருந்தவாறே புதிய சட்ட விதிகளை பிறப்பித்து வருகிறாராம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com