தென் மாவட்டங்களை புரட்டிப் போட்ட ஒகி புயல், இன்று காலை லட்சதீவுகளில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. தென் மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ஒகி புயல் வலுப்பெற்று நகர்ந்து சென்று லட்சத்தீவு பகுதியில் உள்ள அமினித்தீவுக்கு தென்கிழக்கே 270 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்தப் புயல் காரணமாக லட்சத்தீவுகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. படகுகள், வீடுகள் உட்பட மொத்த பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் வழக்கத்தை விட அதிகமாக சீறுவதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அங்கு அடுத்த 24 மணிநேரம் கடும் புயல் மழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேத விவரம் குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.