லாக்-கப் அருகே நின்று டிக் டாக்: பெண் காவலர் சஸ்பெண்ட்
குஜராத்தில் காவல் நிலைய லாக் அப் அருகே நின்று பெண் காவலர் எடுத்த டிக் டாக் வீடியோ வைரலானதை அடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் மெஹசானா மாட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் அர்பிதா சவுத்ரி. டிக் டாக் செயலியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கும் இவருக்கு, தானும் இதுபோன்று ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை. இதையடுத்து சீருடையில் இல்லாமல், லாக் அப் அருகில் நின்று இந்தி பாடலுக்கு ஆடினார்.
இதை வீடியோவாக எடுத்து, டிக் டாக் செயலியில் வெளியிட்டார். இது வைரலானது. இதை அடுத்து, காவல் நிலையத்துக்குள், பொறுப்பில்லாமல் காவலர் ஒருவரே இப்படி ஆடலாமா? என அவருக்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் அர்பிதா சவுத்ரியை, இடைநீக்கம் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டுள்ளார். அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
‘’பணி நேரத்தில் சீருடையில் இல்லாமல் இருந்திருக்கிறார். அதோடு, காவல் நிலையத்துக்குள் வீடியோ எடுத்திருக்கிறார். காவலர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கங்களை மீறியுள்ளார். அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’’ என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா தெரிவித்துள்ளார்.