மக்களை காக்க ஜேசிபியில் ஆற்றைக் கடக்கும் மருத்துவ பணியாளர்கள்

மக்களை காக்க ஜேசிபியில் ஆற்றைக் கடக்கும் மருத்துவ பணியாளர்கள்
மக்களை காக்க ஜேசிபியில் ஆற்றைக் கடக்கும் மருத்துவ பணியாளர்கள்

லடாக் யூனியன் பிரதேசத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க கடும் குளிரில் ஜேசிபி இயந்திரத்தின் முன்பு அமர்ந்து ஆற்றைக் கடக்கும் மருத்துவ முன்களப் பணியாளர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில், இப்போது கடந்த சிலநாள்களாக லட்சத்துக்கும் கீழ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. யூனியன் பிரதேசமான லடாக்கில் இதுவரை 19,258 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மருத்துவமனையில் 1011 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். லடாக்கில் நேற்றைய ஒருநாள் பாதிப்பு 61 ஆக இருந்தது.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்பதற்காக இரவுப் பகலாக மருத்துவர்களும் முன் களப் பணியாளர்களும் வேலைப் பார்த்து வருகிறார்கள். ஆனாலும் வட இந்தியாவின் சில மாநிலங்களில் தங்களது உயிரை துச்சமென மதித்து பணியாற்றும் மருத்துவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்துகின்றனர். இந்தக் கொரோனா பணியினால் பல மருத்துவ முன்களப் பணியாளர்கள் தங்களது உயிரை விட்டுள்ளனர்.

இந்நிலையில் லடாக் நாடாளுமன்ற உறுப்பினர் ஜம்யாங் செரிங் நம்ஜியால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார், அதில் "கொரோனா முன்களப் பணியாளர்கள் தங்கள் மருத்துவ சேவைக்காக லடாக்கின் கிராமத்துக்கு வருகிறார்கள், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை கொடுப்போம்" என தெரிவித்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஜேசிபி வண்டியில் இருக்கும் முன்பக்கத்தில் 4 பேர் ஆற்றை கடக்கிறார்கள். இப்போது அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com