பைக், போன் வாங்கும் ஆசை : ரூ.1 லட்சத்துக்கு 3 மாத பெண் குழந்தையை விற்ற தந்தை
ரூ.1 லட்சம் பணத்துக்காக பிறந்து 3 மாதமான பெண் குழந்தையை தந்தையே விற்ற அவலம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்காபல்லபூர் மாவட்டத்தில் உள்ள தினகல் கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் பண்ணையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் பிறந்து 3 மாதங்களே ஆன கைக்குழந்தை ஒன்று உள்ளது. அந்தக் குழந்தையை விலைக்கு விற்க அந்நபர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இடைத்தரகர் மூலம் ஒரு தம்பதியினர் குழந்தையை வாங்கிக்கொள்ள முன்வந்துள்ளனர்.
அவர்களிடம் தனது 3 மாத பெண் குழந்தையை அந்நபர் ரூ.1 லட்சத்திற்கு விற்றுள்ளார். குழந்தையின் தாய் விற்க வேண்டாம் என மறுத்தபோதும், அதை பொருட்படுத்தாமல் குழந்தையை விற்றுள்ளார். அத்துடன் குழந்தையை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்தில் ரூ.50 ஆயிரத்திற்கு இருசக்கர வாகனமும், ரூ.15 ஆயிரத்திற்கு செல்போன் ஒன்றையும் வாங்கியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் வந்ததும், உடனே விரைந்து சென்ற அவர்கள் குழந்தையை மீட்டனர். அத்துடன் குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.