காதலனுடன் சேர்ந்து கணவனை புதைத்த மனைவி விஷம் அருந்திய நிலையில் மீட்பு!

காதலனுடன் சேர்ந்து கணவனை புதைத்த மனைவி விஷம் அருந்திய நிலையில் மீட்பு!

காதலனுடன் சேர்ந்து கணவனை புதைத்த மனைவி விஷம் அருந்திய நிலையில் மீட்பு!
Published on

காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து புதைத்த மனைவி, விஷம் அருந்திய நிலையில் காதலனுடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகே கழுத்துக்குளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரிஜோஷ் (37). அதே பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பணிப்புரிந்த இவர்,  அருகிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரை கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் காணவில்லை. இதுபற்றி சாந்தம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ரிஜோஷின் மனைவி லிஜி (29) யிடம் விசாரணை நடத்தினர்.

அதில் லிஜி, தனது கணவர் மொபைல் போனில் தன்னை திருச்சூரில் இருந்தும், கோழிக்கோட்டில் இருந்தும் தொடர்பு கொண்டதாகவும் அச்சப்படத் தேவையில்லை எனவும் கூறினார். பின்னர் தனது மொபைலில் ரிஜோஷின் இன்கம்மிங்க் கல்
ஹிஸ்ட்ரியை போலீசாரிடம் காட்டியுள்ளார். அதை ஏற்காத ரிஜோஷின் உறவினர்கள் மற்றும் பெற்றோர், காவல் நிலையத்தில் மீண்டும் புகார் தெரிவித்தனர். இதனால் ரிஜோஷின் மனைவி லிஜி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி ரிஜோஷ் பணியாற்றிய ரிசார்ட் உரிமையாளரான திருச்சூரை சேர்ந்த வாசிம் அப்துல் காதரும் (27), ரிஜோஷின் மனைவி லிஜியும், அவரது இரண்டு வயது குழந்தையும் காணாமல் போயினர். இதனால் லிஜிக்கும், ரிசார்ட் உரிமையாளருக்கும் தகாத உறவு இருந்திருக்கலாம் என உறுதி செய்த போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை யை துரிதப்படுத்தினர்.

முதற்கட்டமாக ரிசார்ட் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அதில் ரிசார்ட்டின் பின்புறம் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்கு அருகே உள்ள பகுதியில் புதிதாக மண் போட்டு நிரப்பப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதைத் தோண்டியபோது சாக்கு மூட்டை ஒன்று தெரிந்தது.

 அதற்குள் சடலம் ஒன்று இருந்தது. அது காணாமல் போனதாகக் கூறப்பட்ட ரிஜோஷ் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. 
தோண்டி எடுக்கப்பட்ட ரிஜோஷின் உடல் உடற்கூராய்வுக்காக இடுக்கி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வரும் வாசிம் அப்துல்காதர், தனது சகோதரனுக்கு வாட்ஸ் ஆப்பில் வீடியோ ஒன்றை அனுப்பினார். அதில் “சாந்தம்பாறை போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட ரிஜோஷ் கொலை வழக்கில் குற்றவாளி நான் தான். அதில் எனது சகோதரருக்கும் சகோதரர்களின் நண்பர்களுக்கும் எந்த தொடர்புமில்லை. அவர்களை விட்டுவிடவும்” எனவும் கூறியிருந்தார்.

போலீசார் அவர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், ரிஜோஷின் மனைவி லிஜி, தனது இரண்டு வயது மகள் ஜோவனா, காதலன் வசிம் அப்துல் காதர் ஆகியோர் மும்பை பனவேலியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் விஷம் அருந்திய நிலையில் மகாராஷ்டிரா போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதில் லிஜியின் குழந்தை ஜோவனா உயிரிழந்துவிட்டது. 

கவலைக்கிடமான நிலையில் உள்ள லிஜிக்கும் அப்துல் காதருக்கும் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.  இதையடுத்து இடுக்கி தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com