குல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள்  

குல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள்  
குல்பூஷண் ஜாதவ் வழக்கின் தீர்ப்பு - கொண்டாடித் தீர்த்த அரசியல் தலைவர்கள்  

குல்பூஷண் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர். 

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். உண்மைகளை விரிவாக ஆராய்ந்து தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை தொடர்ந்து, பாகிஸ்தான் நீதிமன்றத்திலும், குல்பூஷண் ஜாதவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் தமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு, இந்தியாவின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை, சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாகிஸ்தான் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விவரங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கையாக அளிக்கவுள்ளார். 

‌தீர்ப்பு வெளியானதும் டெ‌‌‌ல்லியி‌ல் செ‌ய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமை‌‌‌ச்சர் ரா‌ஜ்நாத் சிங், சந்தேகமே இல்லாமல், இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எனத் தெரிவித்தார். 

சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, ஜாதவ் விரைவில் நாடு திரும்பவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். தம்முடைய எண்ணங்கள் சிறையில் தனியாக வாடும் ஜாதவுடனும், புதிய நம்பிக்கையை பெற்றுள்ள அவரது குடும்பத்தினருடனும் இருப்பதாக ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நீதி வெற்றி பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மொத்த நாடே ஜாதவின் குடும்பத்தின் மகிழ்ச்சியில் பங்கெடுப்பதாக கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com