மணிப்பூர்: குக்கி இனத்தவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதா மாநில அரசு?-நடந்தது என்ன? உறையவைக்கும் தகவல்

மணிப்பூரில் குக்கி இன மக்களை வலுக்கட்டாயமாக அரசே வெளியேற்றியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்PTI

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்டீஸ் ஆகிய இரண்டு இனக் குழுக்களிடையே கடந்த மே 3ஆம் தேதி வெடித்த வன்முறை, கொஞ்சநாட்கள் அமைதியாக இருந்த நிலையில், மீண்டும் கடந்த வாரம் மோதல் வெடித்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போதுவரை அங்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறை காரணமாக மெய்டீஸ் - குக்கி இன மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொடர்ந்து வெளியேறி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்twitter

அந்த வகையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் வசித்துவந்த சுமார் 300 குக்கி பழங்குடியின குடும்பங்கள் வெளியேறி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இம்பாலில் வசித்துவந்த குக்கி பழங்குடியின குடும்பங்களில் பலர் வெளியேறிய நிலையில், சுமார் 10 குடும்பங்கள் அங்கு தொடர்ந்து வசித்து வந்தனர். அவர்களை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கையை மாநில அரசே மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் 10 குக்கி பழங்குடியின குடும்பங்களைச் சோந்த 24 பேர் அவ்வினத்தவர் பெரும்பான்மையாக வாழும் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இம்பாலின் நியூ லாம்புலேனில் எஞ்சியிருந்த குக்கியினத்தவர்களில் 24 பேர், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி நள்ளிரவின்போது தங்கள் வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சீருடை அணிந்த ஆயுதம் ஏந்திய காவலர்களால் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தவிர, தங்கள் உடைமைகளைக்கூட எடுக்கவிடாமல் அரசு தங்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக, குண்டுதுளைக்காத வாகனங்களில் ஏற்றிச் செல்லப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட குக்கி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது, மாநில அரசின் உத்தரவுப்படியே நடைபெறுகிறது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குக்கி இனத்தைச் சேர்ந்த டூதாங், “என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறியவுடன், வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டோம். எங்கள் பொருட்களை பேக் செய்ய எங்களுக்கு நேரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் எங்களை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்றுகூட எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. வாகனம் நின்றபோது, ​​நாங்கள் மோட்பங்கில் இருப்பதைக் கண்டோம்” எனத் தெரிவித்துள்ளார். மோட்பங் என்பது, நியூ லாம்புலேனில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள குக்கி இன மக்கள் அதிகம் வசிக்கும் காங்போக்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும்.

இதன்மூலம், இம்பால் பள்ளத்தாக்கில் இனஅழிப்பு முற்றிலுமாக நிறைவடைந்திருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "இம்பாலில் வாழ்ந்து வந்த கடைசி 5 குக்கி குடும்பங்களை அதிகாரிகள், அவர்களது வீடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

மணிப்பூர் போலீஸ், அசாம் ரைபிள் படை
மணிப்பூர் போலீஸ், அசாம் ரைபிள் படைட்விட்டர்

இதன்மூலம், மெய்டீஸ் சமூக மக்கள் ஆதிக்கம் செலுத்தும் இம்பால் பள்ளத்தாக்கில் இனஅழிப்பு நிறைவடைந்துள்ளது தெரிய வருகிறது. இன அழிப்பை மாநில அரசு தலைமை தாங்கி நடத்தியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்படி மாநில அரசு நடப்பதாக மத்திய அரசு கூறுகிறது. இதைவிட வெட்கக்கேடானது வேறு எதுவும் இருக்க முடியாது. சட்டத்திற்கு புறம்பாக இந்தளவுக்கு மோசமாக இறங்கியிருப்பது இதுவரை நடைபெறாத ஒன்று" எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com