
மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் முதலமைச்சர் நாராயணசாமிக்கு வாழ்த்துகள் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
காந்தியின் பிறந்தநாளையொட்டி ‘தூய்மை இந்தியா’ வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள பல அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் ‘தூய்மை இந்தியா’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் உள்ள சாரம் மார்க்கெட் பகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி நேற்று துப்புரவு பணியை தொடங்கிவைத்தார். துப்புரவு ஊழியர்கள் சுத்தபணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென முதலமைச்சர் நாராயணசாமியும் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து பேசிய நாராயணசாமி மழைக்காலத்துக்கு முன்பே கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ‘தூய்மை இந்தியா’ திட்ட விழிப்புணர்வுக்காக முதலமைச்சரே கால்வாயில் இறங்கி சுத்தம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமியின் இந்தச் செயலை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ''தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுத்து செல்ல மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் நாராயணசாமிக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.