‘இந்தியாவில் கொரனா பாதிப்பு இல்லை’ - மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை யாரும் கொரனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
சீனாவிலிருந்து கொரனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்திய அரசு பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சீனாவிலிருந்து இந்தியா வரும் அனைத்து நபர்களும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய விமான நிலையங்களில் thermal screening எனப்படும் சிறப்பு சோதனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 137 விமானங்களில் வந்த 29 ஆயிரம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் யாருக்கும் கொரனா வைரஸ் தாக்குதல் இல்லை என கூறியுள்ள சுகாதாரத்துறை வெளிநாடுகளில் இருந்து வந்த சுமார் 100 பேர் தனி வார்டுகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
நேபாளத்தில் கொரனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சீனாவிலிருந்து ஜெய்ப்பூர் திரும்பிய மருத்துவர் ஒருவருக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.