”அவர்கள் வேண்டுமென்றே” மாணவருடன் திருமணம் செய்ததாக வெளியான வீடியோ.. கொல்கத்தா பேராசிரியர் ராஜினாமா!
கொல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் முதலாம் வகுப்பு மாணவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டது போன்று காணொளி வெளியாகி சர்ச்சை ஆன நிலையில், தனது பதவியை அப்பேராசிரியர் ராஜினாமா செய்துள்ளார்.
கொல்கத்தாவில் செயல்பட்டுவரும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணியாற்றிவரும் பெண் ஒருவர் முதலாம் ஆண்டு மாணவரை பெங்காலி முறைப்படி திருமணம் செய்துக்கொண்டது போன்று எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலானது.
இதை அடுத்து அப்பேராசிரியர் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அப் பல்கலைக்கழகம் பேராசிரியருக்கு கட்டாய விடுப்புக்கொடுத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் நடைப்பெற இருந்த மனோ நாடகத்தின் ஒரு நிகழ்சிக்காகதான் இத்தகைய சம்பவம் எடுக்கப்பட்டது என்றும் மேலும் பல்கலைக்கழகம் மற்றும் மாணவர்களின் ஒப்புதலுடனும் இந்நாடகத்தின் ஒத்திகை நடைப்பெற்றது என்றும் அப்பேராசிரியர் விளக்கி இருந்தார்.
இந்நிலையில், அப்பேராசியர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், “என்னுடன் பணிபுரியும் ஊழியர் வேண்டுமென்றே இந்த ஒத்திகை வீடியோவை கசியவிட்டனர். அதனால் எனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆகவே, பல்கலைக் கழகத்துடனான எனது தொடர்பை இனி தொடர முடியாது; எனது பணியை ராஜினாமா செய்வதாகவும் கூறி பல்கலைகழகத்திற்கு ஈமெயில் அனுப்பி உள்ளேன்” என்று கூறியுள்ளதாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.