இந்துக்கள் மீதான தாக்குதல் எதிரொலி | ’வங்கதேச மக்களுக்கு சிகிச்சை கிடையாது’ - கொல்கத்தா மருத்துவமனை!
அண்டை நாடான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது முதல் தற்போதுவரை, சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், சொத்துகள், உடைமைகள் சேதமாக்கப்படுகின்றன. அந்த வகையில், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் வங்கதேச அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற பேரணியில், அந்நாட்டு கொடி மீது காவிக்கொடி ஏற்றிய புகாரில்தான் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வங்காளதேசத்தின் சட்டோகிராமில் மற்றொரு இந்து மதத் தலைவர் ஷியாம் தாஸ் பிரபுவும் கைது செய்யப்பட்டுள்ளார். தவிர, இதே சட்டோகிராமில் அடுத்தடுத்து 3 இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இப்படி, வங்கதேசத்தில் இந்து மக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது உலகளவில் பேசுபொருளாகி உள்ளது. மேலும், இந்த அசாதாரண சூழல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக இந்திய - வங்கதேச எல்லையான மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், வடக்கு கொல்கத்தாவின் மானிக்தாலா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்று, அங்கிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காது எனக் கூறியுள்ளது.
இதுகுறித்து அம்மருத்துவமனை அதிகாரி சுப்ரான்ஷு பக்த், “எங்கள் மருத்துவமனையில் வங்கதேச நோயாளிகளை அனுமதிக்க மாட்டோம். அங்கு போராட்டம் என்கிற பெயரில் இந்து சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தி, நம் தேசியக் கொடியை அவமதித்து வருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளோம். இதை கொல்கத்தாவில் உள்ள மற்ற மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும். அவர்களின் சுதந்திரத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளை நாங்கள் காண்கிறோம். மற்ற மருத்துவமனைகளும் எங்களுக்கு ஆதரவளித்து, இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.