இதயமே இல்லையா! கேரளா மார்க்கெட்டிங் நிறுவனத்தின் நிகழ்ந்த அட்டூழியம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
கேரளாவில் உள்ள மார்க்கெட்டிங் நிறுவனத்தில், டார்கெட்டை முடிக்கவில்லை எனக் கூறி ஊழியர்களை மிகவும் கொடூரமாக துன்புறுத்தியது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று மாதாந்திர இலக்குகளை முடிக்காத ஊழியர்களை சங்கிலியால்கட்டி, மண்டியிடச் செய்து தரையில் இருக்கும் நாணயத்தை வாயால் எடுக்கச் செய்து துன்புறுத்தியுள்ளது. ஆடைகளை கட்டாயப்படுத்தி களையச் செய்தும் கொடுமைப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், அந்த நிறுவனத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால், விசாரணை நடத்த கேரள தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், இது பழைய வீடியோ என்றும், பணியில் இருந்து நீக்கப்பட்ட மேலாளர் இதனை தற்போது வெளியிட்டுள்ளதாகவும் கொச்சியைச் சேர்ந்த தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனதை பதற வைக்கும் காட்சிகள் வெளியான நிலையில், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படும் விதம் குறித்து விவாதம் எழுந்துள்ளது.