
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதன் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பாரதிய ஜனதா தக்க வைக்குமா, காங்கிரஸ் கைப்பற்றுமா அல்லது தொங்கு சட்டசபையா என்பது தெரியவரும். அதுவும் இன்று நண்பகலுக்குள் தெரிய வருமென சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தத்தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் வட மேற்கு பகுதியில் உள்ள கிட்டூர் கர்நாடகா பகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
1956-இல் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கத்தின்போது அப்போதிருந்த பம்பாய் மாகாணத்தின் சில பகுதிகள் கர்நாடகாவோடு சேர்க்கப்பட்டன. அப்பகுதிகள் மும்பை கர்நாடகா என அழைக்கப்பட்ட நிலையில் அதன் பெயரை ராணி கிட்டூர் சென்னம்மா நினைவாக கிட்டூர் கர்நாடகா என மாற்றுவதாக மாநில அரசு அறிவித்தது.
கடந்த 3 பேரவை தேர்தல் முடிவுகளின்படி இந்தப்பகுதியில் பாஜக வலுவாக காணப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள 50 தொகுதிகளில்,
* 2008 ஆம் ஆண்டில் 36இல் பாஜக வென்றிருந்தது. காங்கிரஸ் 12 தொகுதியிலும் மத சார்பற்ற ஜனதா தளம் 2 தொகுதியிலும் வென்றிருந்தன.
* எடியூரப்பா பாஜகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட 2013ஆம் ஆண்டில் இங்கு காங்கிரஸே அதிக இடங்களை வென்றது.
அப்போது காங்கிரஸ் 31 இடங்களிலும் பாஜக 13 இடங்களிலும் வென்றன. மதசார்பற்ற ஜனதா தளம் ஓரிடத்திலும் பிற கட்சிகள் 5 இடத்திலும் வென்றன.
* எனினும் 2018இல் பாஜக இங்கு பெரும் வெற்றியை ஈட்டியது. பாஜக 30 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் பிற கட்சிகள் ஓரிடத்திலும் வெற்றிபெற்றன.
பெலகாவி, ஹுப்பள்ளி, தார்வாட், விஜயபுரா போன்ற முக்கிய ஊர்கள் இப்பகுதியில் உள்ளன. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதலமைச்சர் லட்சுமண் சவடி போன்றவர்கள் இப்பகுதியை சார்ந்தவர்கள். இங்கு பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமூகத்தினரின் வாக்குகளை பெற பாஜகவும் காங்கிரஸூம் கடும் போட்டிபோடுகின்றன.
லிங்காயத்துகளுக்கு கூடுதலாக 2% இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களுடன் பாஜக களமிறங்கியுள்ளது. இப்பகுதியின் முக்கியத்துவம் கருதி பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் 2 பெரிய பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளனர். காங்கிரஸின் ராகுல் காந்தியும் பெலகாவியில் இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தியுள்ளார்.
பாஜகவிலிருந்து வந்துள்ள ஷெட்டரும் லட்சுமண் சவடியும் தங்களுக்கு கணிசமான வாக்குகளை பெற்றுத்தருவார்கள் என காங்கிரஸ் நம்புகிறது.
மும்பை கர்நாடகா பகுதியில் அதிக இடங்களில் வெல்பவர்களே மாநிலத்திலும் ஆட்சியையும் பிடிப்பார்கள் என்ற வரலாறு உள்ளதால் இங்கு கட்சிகள் அதிகபட்ச முனைப்புடன் களப்பணி ஆற்றி வருகின்றன.