இந்து சமாஜ் தலைவர் ஆனார், கமலேஷ் திவாரியின் மனைவி
உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி கிரண் திவாரி அந்தக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் கமலேஷ் திவாரி (43). இந்து சமாஜ் கட்சியை நிறுவிய இவர், கடந்த 18 ஆம் தேதி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்தக் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு கமலேஷ் திவாரி ஆற்றிய உரை தங்களை புண்படுத்தியதால் அவரை கொலை செய்தோம் என்று குற்றவாளிகள் தெரிவித்ததாக, உ.பி மாநில டிஜிபி ஓ.பி.சிங் கூறியிருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டே கமலேஷுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கமலேஷ் திவாரியின் மனைவி கிரண் திவாரி, இந்து சமாஜ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.