“ காகமும் யோகாவும்” சர்ச்சைக்குள்ளான கிரண் பேடியின் ட்விட்டர் பதிவு
இரண்டு காகங்கள் மரக்கிளையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, தர்ணாவும் ஒரு வகை யோகா தான் என கிரண்பேடி தெரிவித்த கருத்தால் சர்ச்சை நிலவுகிறது.
புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து கடந்த 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் அவரின் தர்ணா போராட்டம் தொடர்கிறது. அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காகங்கள் கொண்ட படத்தை ட்விட்டரில் பதிவிட்ட கிரண்பேடியின் செயலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 2 காகங்கள் மரக் கிளையில் அமர்ந்திருப்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ள கிரண்பேடி, தர்ணா செய்வதும் ஒருவகை யோகா தான் என கூறியுள்ளார்.
அத்துடன் ஆளுநர் மாளிகையில் பூனை யோகா செய்வது போன்ற படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிரண்பேடி, யோகா அனைவருக்கும் பொதுவானது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடைய கிரண்பேடி நிற அடிப்படையில் விமர்சனம் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்னர்.