அரியவகை தேயிலையாக கூறப்படும் மனோகரி கோல்ட் தேயிலை ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
அசாம் தேயிலை தோட்டத்தில் பயிராகும் அரியவகை தேயிலை மனோகரி கோல்ட். இது தங்க இலை சருகு போன்று இருப்பதால் இதற்கு தனிச்சிறப்பு. இந்தத் தேயிலை விளைவதற்கு சரியான சீதோஷ்ண நிலை வேண்டும். இந்த ஆண்டு அதற்கான சீதோஷ்ண நிலை சரியாக அமையாததால் விளைச்சல் குறைவு என்றே கூறப்படுகிறது. சிறிய மொட்டிகளில் இருந்து பெறப்படும் தேயிலை என்பதால் இதனை தயாரிப்பது சற்று சிரமம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருடத்துக்கான தேயிலை ஏலத்தில் மனோகரி கோல்ட் தேயிலை ஒரு கிலோ ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போனது. கடந்த ஆண்டு இந்தத் தேயிலை ரூ.40 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த வகை தேயிலை பொது ஏலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு ஏலம் போனது இதுவே முதல்முறை என ஏல மையத்தின் செயலர் தினேஷ் பிஹானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள தேயிலை தோட்ட அதிபர் ராஜன் லோஹியா, கடந்த ஆண்டு இந்த கோல்ட் தேயிலையை 2கிலோ கொண்டு வந்தேன். அதனை ஒரு வாடிக்கையாளர் ஒரு கிலோவை ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கினார். மீதமிருந்த தேயிலையை 100 கிராம் ரூ.8 ஆயிரம் என்ற விலையில் விற்றுவிட்டேன் என்று தெரிவித்தார்

