“கொலை கூட பண்ணுங்க, நாங்க பாத்துக்கிறோம்” - மாணவர்கள் மத்தியில் உ.பி துணைவேந்தர் பேச்சு
உத்தரப் பிரதேசத்தில் பல்கலைக் கழக துணைவேந்தர் ஒருவர், சண்டையினு வந்தா கொலைகூட செய்யுங்கள், தாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று மாணவர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புர்வாஞ்சல் பல்கலைக் கழக துணைவேந்தராக இருப்பவர் ராஜா ராம் யாதவ். புர்வாஞ்சல் பல்கலைக் கழகத்தின் கீழ் ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அந்தப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் காஸிபூரில் உள்ள கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து மாணவர்கள் மத்தியில் ராஜா ராம் யாதவ் பேசினார். அப்போது, “நீங்கள் இந்த பல்கலைக் கழகத்தின் மாணவராக இருந்தால், என்னிடம் அழுது கொண்டு வரக் கூடாது. எப்பொழுதாவது சண்டை என்று வந்தால், சண்டைக்கு வருபவர்களை அடியுங்கள். முடிந்தால் கொலையும் செய்யுங்கள். பின்னர் நடப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று அவர் பேசினார்.
துணைவேந்தர் ராஜா ராம் யாதவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சைலேந்திர சிங் கூறுகையில், “துணைவேந்தர் பொறுப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அப்படியான பொறுப்பில் இருக்கும் ஒருவர் மாணவர்கள் மத்தியில் இப்படி பேசுவது உகந்தது அல்ல” என்றார்.
சமாஜ்வாடி செய்தி தொடர்பாளர் மனோஜ் ராஜ் துப்சந்தி, “துணைவேந்தரின் இந்தப்பேச்சு கண்டிக்கத்தக்கது. கல்வியில் முன்னேறுவதற்குதான் மாணவர்களை துணைவேந்தர் ஊக்குவிக்க வேண்டும். ஆனால், புர்வாஞ்சல் துணைவேந்தர் வன்முறையில் ஈடுபட ஊக்குவிக்கிறார். இதுமிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.