kidnapped 18 month old  chhattisgarh girl baby rescue from tamilnadu
child kidnap newspt web

சத்தீஸ்கரில் காணாமல்போன 18 மாத குழந்தை கும்பகோணத்தில் மீட்பு - கடத்தியவர் பகீர் வாக்குமூலம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின்னர் கும்பகோணத்தில் மீட்கப்பட்டுள்ளது.
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடத்தப்பட்ட குழந்தை 13 நாட்களுக்குப் பின்னர் கும்பகோணத்தில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை பிடித்திருந்ததால் தூக்கி வந்து விட்டதாக கடத்தல் நபர் கூறியது தான் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. என்ன நடந்தது என பார்க்கலாம். 

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சோனு மாணிக்புரி. இவர் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வெளியூர் செல்வதற்காக துர்க் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி வந்துள்ளார். அன்று இரவு 10 மணியளவில் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகத்தின் முன் அனைவரும் படுத்து உறங்கியுள்ளனர். மறுநாள் (ஜூலை 27) அதிகாலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது, சோனு மாணிக்புரியின் 18 மாத குழந்தையான கார்த்திக் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. 

அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் குழந்தையை தேடியுள்ளனர். ஆனால், குழந்தை தேடியும் கிடைக்காததால், அவர்கள் துர்க் ஜிஆர்பி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் பிஎன்எஸ் 137(2) கடத்தல் வழக்கு பதிவு செய்து துர்க் ஜிஆர்பி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சுமார் 45 வயதுடைய ஆண் ஒருவர், குழந்தையை தூக்கிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரின் புகைப்படத்தை வைத்து விசாரித்தபோது, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சாத்தனூரை சேர்ந்தவர் என தெரியவந்தது. 

குற்றவாளியை பிடிக்க, துர்க் ஜிஆர்பி காவல் நிலைய உதவி துணை ஆய்வாளர் ஜனக்லால் திவாரி மயிலாடுதுறை ஆர்பிஎப் ஆய்வாளர் சுதிர்குமாரிடம் உதவி கோரியுள்ளார். இதனடி அடுத்து அவரது உத்தரவின் பேரில் தலைமை காவலர் இளையராஜா அம்மாநில போலீசாருக்கு கடத்தல் நபரை பிடிக்க உதவியுள்ளார்.  கடத்தலில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா சாத்தனூர் கிராமம் சந்திரன் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ஆறுமுகம்(45) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதையடுத்து, சட்டீஸ்கரில் இருந்து வந்திருந்த சோனு மாணிக்புரி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தை கடத்தியது தொடர்பாக விசாரித்தபோது குழந்தையை பிடித்திருந்ததால் தூக்கி வந்து விட்டதாக ஆறுமுகம் கூறியது அதனை கேட்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com