வடமாநிலங்களுக்கு அதிகம் செல்பவர்களாக இருந்தால், சீக்கியர்களோடு பழகுபவர்களாக இருந்தால் அவர்களது குருத்வாராக்கள் பற்றி கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். நமது ஊர் கோயில்களில் செய்யப்படும் அன்னதானம் போல், அங்கே தினமும் குறைந்தது 1000 பேராவது உணவருந்துவார்கள். யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக குருத்வாராக்களில் உணவளிப்பது தொடங்கப்பட்டது. சீக்கியர்களின் ஆலயங்களில் இந்த முறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட அமைப்பு கல்சா எய்ட். நிவாரண பணிகளை மேற்கொள்வதே இவர்களின் முதன்மையான பணி. குறிப்பாக பேரிடர்களின் மாட்டி பசியால் அவதிப்படுவர்களுக்கு உணவு கொடுக்கும் உன்னதப்பணி. கேரள வெள்ளத்தையும் மக்களின் பசியையும் கேள்விப்பட்ட அமைப்பு , உடனடியாக தனது ஆட்களை கேரளா அனுப்பியுள்ளது. இப்போது ஒரு இடத்தில் சமையலறை அமைக்கப்பட்டு 2000 பேருக்கு உணவளித்து வருகிறார்கள். அடுத்த சமையலறை அமைக்கப்பட்டு வருகிறது.
உடனடியாக கல்சா அமைப்பு ஆட்களை அனுப்பினாலும் எங்கே சமைப்பது, யாரை தன்னார்வலர்களாக பயன்படுத்துவது என்ற பிரச்னை இருந்தது. அப்போதுதான் கொச்சியில் இருந்த குருத்வாரா அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. கோயில் நிர்வாகிகளை சந்தித்த போது, தங்களின் உன்னதப்பணியான ஒன்றை செய்ய அனுமதியா என கேட்டதோடு, அவர்களும் இணைந்தனர். இப்போது குருத்வாராவிலேயே சமையலறை உள்ளது. சமைத்த உணவை தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு கொடுக்கிறார்கள். பசியை போக்குவதை விட சிறந்த உதவி ஏதும் உண்டா ?