கேரளா | மோட்டாரை சரிசெய்ய கிணற்றில் இறங்கிய அண்ணன் மாயம்! பதறிய வெளிநாட்டு தங்கை - இறுதியில் சோகம்!
கொல்லத்தில் கிணற்றுக்குள் இறங்கி மோட்டர் சரிசெய்ய சென்றவர் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிராமங்களில் இன்றும் கிணற்றுக்குள் ஒரு பகுதியில் மோட்டாரை வைத்து நீர் இறைப்பதை பார்க்கலாம். அந்த மோட்டரானது ரிப்பேர் ஆனால், யோசிக்காமல் கிணற்றில் இறங்கி மோட்டாரை சரி செய்வதையும் பார்க்கலாம். அதே போல் ஒரு சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கிணற்றுக்குள் இருந்த மோட்டாரை சரி செய்வதற்காக இறங்கிய அண்ணன் நெடுநேரமாக வெளியில் வராததால் பதறிய தங்கை... அடுத்து என்ன நடந்தது ? பார்க்கலாம்.
கேரளாவை அடுத்த கொல்லம் பகுதில் உள்ள அஞ்சல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். இவருக்கு திருமணம் ஆகாததால் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது சகோதரி ப்ரீதா பலிப் அயர்லாந்தில் வசித்துவருகிறார். இளவரசன் தனியாக இருப்பதால் வீட்டில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். இதன் வழியாக வெளிநாட்டில் இருந்து அண்ணனை கவனித்து வந்துள்ளார் ப்ரீதாபலிப்.
இந்நிலையில், சம்பவதினத்தன்று இளவரசனின் வீட்டிலிருந்த கிணற்று மோட்டார் பழுதாகிவிடவே, அவற்றை சரி செய்ய நினைத்த இளவரசன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.
இதை சிசிடிவியின் வழியாக வெளிநாட்டிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார் ப்ரீதா... ஆனால் நீண்ட நேரமாகியும் கிணற்றிலிருந்து சகோதரன் வெளியே வராமல் இருக்கவே... அதிர்ச்சியடைந்த ப்ரீதாபலிப் உடனடியாக அக்கம்பக்கத்தினரை தொலைப்பேசியில் அழைத்து விவரத்தை கூறியுள்ளார்.
விரைவாக இளவரசன் வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர், ஆழமாக இருந்த கிணற்றில் இருந்து இளவரசனை மீட்கமுடியாததால், தீயணப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இளவரசனை மீட்க நினைத்த சமயம் அவர் தண்ணீரில் இறந்து கிடந்தது தெரிந்தது. பிறகு உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.
வெளிநாட்டிலிருந்து சகோதரி ப்ரீதா வந்ததும் அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.