இந்தியா
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அலட்சிய பேச்சு : கேரள மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அலட்சிய பேச்சு : கேரள மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அலட்சியமாக பதிலளித்த கேரள மகளிர் ஆணையத்தின் தலைவர் ஜோசபின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள மகளிர் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் ஜோசபின். இவர் மலையாள டிவி சேனல் ஒன்றில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை வழங்கவும், புகார்கள் அளிக்கவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ஜோசபின் பங்கேற்றார். ஏராளமான பெண்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் புகார் தெரிவித்தனர்.
அப்போது, எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தன்னை கணவரும், மாமியாரும் தாக்குவதாக கூறினார். அதற்கு, ‘இது பற்றி போலீசில் புகார் செய்தீர்களா?’ என்று ஜோசபின் கேட்டார். அந்த பெண் புகார் செய்யவில்லை என்றார். ‘அப்படி என்றால், சிரமத்தை அனுபவித்து வேண்டியவள்தான்' என்று ஜோசபின் கூறினார். இவ்வாறு அவர் பொறுப்பின்றி பதிலளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்துக்கு பிறகு ஜோஸ்பின் பதவி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள் உள்பட பல தரப்பும் அழுத்தம் கொடுத்தன. இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் நேற்று நடந்தது. ஜோசபினின் செயலால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதால், பதவியை ராஜினாமா செய்யும்படி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.