இந்தியா
உடல்நிலை சரியில்லாத வீரரைக் காண 2,700 கி.மீட்டர் பயணித்த தாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
உடல்நிலை சரியில்லாத வீரரைக் காண 2,700 கி.மீட்டர் பயணித்த தாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
(கோப்பு புகைப்படம்)
கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது மகனைக் காண்பதற்காக 50 வயது தாய் ஒருவர் 2,700 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துள்ள சம்பவம் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.
நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ரயில், பேருந்து என எந்தச் சேவையும் செயல்படவில்லை. இந்நிலையில் நோய்வாய்பட்டுக் கிடக்கும் தனது மகனைப் பார்ப்பதற்காகக் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து ஆறு மாநிலங்களைக் கடந்து 2,700 கிலோ மீட்டர் தூரம் தாய் ஒருவர் பயணித்துள்ளார். இந்தப் பயண தூரத்தை அவர் காரிலேயே கடந்து சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது இவருடன் அவரது மருமகள் மற்றும் மற்றொரு உறவினரும் உடன் இருந்துள்ளனர். இவர்களுடன் இணைந்து மூன்று நாட்கள் பயணித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிடிஐ செய்தியாளரிடம் பேசிய ஷீலாம்மா வாசன், நோயால் பாதிக்கப்பட்ட தனது மகன் அருண்குமாரின் (29) உடல்நிலை தற்போது மேம்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். இவரது மகன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றுகிறார். பிப்ரவரியில் விடுப்பில் தனது கிராமத்திற்கு வந்த இவர், ஊரை விட்டுச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, தனது தாயையும் மனைவியையும் சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்துள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், "கடவுளின் ஆசீர்வாதத்தால் எங்கும் எந்தப் பிரச்சனையும் ஏற்படாமல் நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்று கூறியுள்ளார். அருண்குமாரின் நிலை குறித்து ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸில் பணியாற்றும் கேரள மருத்துவர் ஒருவர், குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தார், அதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் வழியாக ராஜஸ்தானை நோக்கி காரில் பயணிக்க முடிவு செய்துள்ளார் ஷீலாம்மா வாசன்.
மத்திய அமைச்சர் வி முரளீதரன், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் உம்மன் சாண்டி ஆகியோரின் உதவியின் மூலம் இந்தக் குடும்பம் மாநிலங்கள் தாண்டி பயணம் செய்வதற்குத் தேவையான அனுமதியைப் பெற்றுள்ளனர்.
எல்லைப் படையில் பணியாற்றி வரும் அருண்குமாரின் ஒரு வயதுக் குழந்தை கேரளாவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.