மனிதாபிமானத்தைக் காட்டிய வைரல் வீடியோ!! சுப்ரியாவுக்கு வீடு பரிசு!!
பார்வையற்ற நபருக்காக பேருந்தை நிறுத்தி வைரலான பெண்ணுக்கு அவர் பணியாற்றும் நகைக்கடை வீடு ஒன்றை பரிசாக அறிவித்துள்ளது
பார்வையற்ற நபருக்காக பேருந்தை ஓடிப்பிடித்து நிறுத்தச் சொல்லி வைரலானார் சுப்ரியா. கேரளாவின் திருவல்லா நகரில் சுப்ரியா சென்றுகொண்டிருந்த போது பார்வையற்ற நபர் ஒருவர் பேருந்தில் ஏற சென்றுகொண்டிருந்தார். ஆனால் பேருந்து கிளம்பியிருந்தது. இதனை அவ்வழியாக சென்றுகொண்டிருந்த சுப்ரியா பார்த்து பேருந்தை துரத்திச் சென்று நிறுத்தினார்.
பின்னர் பார்வையற்ற நபர் குறித்து நடத்துநரிடம் தெரிவித்துவிட்டு மீண்டும் ஓடிச்சென்று பார்வையற்ற நபரை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றிவிட்டார். தூரத்தில் ஒருவர் இதனை தன்னுடைய செல்போனில் எடுத்து இணையத்தில் பதிவிட இது வைரலானது. பலரும் சுப்ரியாவுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர். சுப்ரியா தனியார் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுப்ரியாவை நேரில் அழைத்த நகைக்கடை நிறுவனர் அவருக்கு வீடு ஒன்றை பரிசாக அளித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள சுப்ரியா, என்னை அழைத்து மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார்கள். நூற்றுக்கணக்கான ஊழியர்களின் வாழ்த்துகளால் என் கண்ணில் கண்ணீர் கொட்டியது. ஒரு சாதாரண செயல் என்னை இவ்வளவு பேரின் அன்புக்கு உரியவளாய் மாற்றும் என நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது சுப்ரியா தன் கணவர் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது