இப்படியும் மரணமா?: வங்கியின் கண்ணாடி கதவைக் கவனிக்காமல் மோதிய பெண் உயிரிழப்பு!!
வங்கியில் பொருத்தப்பட்ட கண்ணாடி கதவில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது
கேரளாவில் எர்ணாகுளத்தின் பெரம்பவூரில் உள்ள வங்கிக்குச் சென்றுள்ளார் பீனா (46). தனது இருசக்கர வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு வங்கிக்குள் வந்துள்ளார் பீனா. அப்போது இரு சக்கர வாகனத்தில் இருந்து சாவியை எடுக்கவில்லை என அவருக்கு நினைவு வந்துள்ளது. யாரேனும் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் வேகமாக ஓடிய பீனா வாசலில் இருந்த கண்ணாடி கதவைக் கவனிக்கவில்லை. வேகமாக கண்ணாடி கதவில் மோதி நிலைகுலைந்தார் பீனா.
விழுந்து எழுந்து தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றும் அவரால் முடியவில்லை, உடைந்த கண்ணாடி ஒன்று அவரது அடிவயிற்றை குத்திக் கிழித்துள்ளது. உடனடியாக வங்கியில் இருந்தவர்கள் பீனாவை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் அதிக ரத்தம் வெளியானதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உயிரிழந்த பீனா தனது கணவருடன் எலக்ட்ரிகல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்