இது சொல்பேச்சு கேட்கும் சைவ முதலை... - கேரள கோவில் முதலையின் வைரல் போட்டோ..!

இது சொல்பேச்சு கேட்கும் சைவ முதலை... - கேரள கோவில் முதலையின் வைரல் போட்டோ..!
இது சொல்பேச்சு கேட்கும் சைவ முதலை... - கேரள கோவில் முதலையின் வைரல் போட்டோ..!

முதலைகள் தனது இரைக்காக விலங்குகளையும் மனிதர்களையும் அடித்து சாப்பிடும் என அனைவரும் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு முதலை சைவ பிராணியாகவே வாழ்ந்து வருகிறது.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபுரா என்ற கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஏரிக் கோயில் ஒன்று உள்ளது. இதன் வளாகத்திற்குள் உள்ள ஒரு குகையில் சைவ முதலை ஒன்று வசித்து வருகிறது. அந்த முதலைதான் இந்த கோயிலை பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த முதலை பக்தர்கள் வழங்கும் பிரசாதத்தை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்து வருகிறது. அந்த முதலையின் பெயர் பாபியா.

இந்நிலையில் பாபியா, அதிகாலையில் முதல் முறையாக கோயில் வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த அர்ச்சகரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கோயில் அதிகாரி சந்திரசேகரன் கூறுகையில், “சைவ முதலை கோயிலின் வளாகத்திற்குள் வந்தது. அங்கு சிறிது நேரம் இருந்துவிட்டு பின்னர், கோயிலின் தலைமை அர்ச்சகர் சந்திரபிரகாஷ் நம்பீசன் வேண்டுகோளை ஏற்று மீண்டும் குகைக்கு திரும்பியது. ஆனால் பாபியா கோயில் கருவறைக்குள் நுழைந்ததாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் தவறான தகவல்” எனத் தெரிவித்தார்.

பாபியா ஒரு சைவ முதலை என்றும், 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் குளத்தில் வசித்து வருவதாகவும் அப்பகுதிவாசிகள் நம்புகின்றனர். இருப்பினும், இது எப்படி இங்கு வந்தது? யார் பெயரிட்டது? என்பது குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

கோயிலில் உள்ள குளத்தில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். ஆனால் யாரையும் இதுவரை பாபியா தாக்கியதில்லை. ஏன் குளத்தில் இருக்கும் மீன்களுக்கு கூட பாபியாவால் எந்த துன்பமும் நேர்ந்ததில்லை என்பதே உண்மை என்கின்றனர் அதிகாரிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com