கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் வெட்டிக்கொலை !
கேரளாவில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த இரண்டு தொண்டர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்த கிரிபேஷ் (24) மற்றும் சரத் லால் (29) அங்குள்ள இளைஞர் காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு உள்ளூர் கட்சிகளுடன் சற்று பிரச்னை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கிரிபேஷ் மற்றும் சரத் லால் இருசக்கர வாகனத்தில் காசர்கோடு பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத அந்த நபர்கள் காரில் சென்று இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
தாக்குதலால், கிரிபீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சரத் லால் உயிருக்கு போராடிய நிலையில் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசியல் ரீதியான மோதலால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே இருவர் கொலைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என இளைஞர் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக இளைஞர் காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில், “என்னவொரு அக்கிரமும், கோழைத்தனமான தாக்குதல் இது. இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள், கொடூர முறையில் கொலை செய்யப்பட்டதற்கு கடுமையான கண்டனங்கள். எப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பயங்கரவாதம் கேரளாவில் நிறுத்தப்படும்..? உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு வருத்தத்திலும் பங்கேற்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொலையை கண்டித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி காசர்கோடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.