“தமிழ்நாடு மக்களுடன் கேரளா இருக்கும்” - பினராயி விஜயன்
‘கஜா’ புயலிலிருந்து மீண்டு வரும் தமிழ்நாடு மக்களுக்கு உதவியாக கேரளா இருக்கும் என அம்மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர்,தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முன்னதாக நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ஆகியோரும் பொருளாகவும், ரொக்கமாகவும் உதவி அளித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சத்துக்கு நிவாரண பொருட்கள் , ரூ.10 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். நடிகர் சிவக்குமார் குடும்பம் சார்பில் நிவாரண நிதியாக ரூ50 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் ரஜினிகாந்த், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ‘கஜா’ புயலிலிருந்து மீண்டு வரும் தமிழ்நாடு மக்களுக்கு உதவியாக கேரளா இருக்கும் என அம்மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் குடிநீர், மெழுகுவர்த்தி, உணவுப்பொருட்கள், புது துணிகள் உள்ளிட்டவை திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வழங்கப்படும் என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.