கேரள சாகித்ய அகாடமி தலைவர் கே.சச்சிதானந்தன் அனைத்து பதவிகளிலிருந்தும் ஓய்வு!
கேரள சாகித்ய அகாடமியின் தலைவராக இருந்த கவி கே சச்சிதானந்தன் (வயது 78), தான் வகித்து வந்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கவி கே சச்சிதானந்தன் ஒரு இலக்கியவாதி. கவிதை, கட்டுரை, மொழிப்பெயர்ப்பு, நாடகம் என்று இவர் எழுதாத துறைகளே இல்லை. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் மற்றும் பயிற்சிப் பள்ளியின் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியவர். தவிர சாகித்ய அகாடமி விருது, கேரள சாகித்ய அகாடமி விருது மற்றும் கங்காதர் மெஹர் விருது போன்ற பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் இவர்
2005-ல் போலந்து அரசாங்கத்தால் இந்தோ-போலந்து நட்புறவு பதக்கமும், 2006-ல் இத்தாலிய குடியரசின் ஆர்டர் ஆஃப் மெரிட்டும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 2011-ல் நோபல் வாய்ப்புக்கான லாட்ப்ரோக் பட்டியலிலும் இருந்தார். இவரைப் பற்றி மளையாளத்தில் ‘கோடை மழை’ என்ற திரைப்படம், 2007-ல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர் கேரள சாகித்ய அகாடமியின் தலைவராக பதவி வகிந்து வந்தார்.
மறதிநோய்..
சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது வலைதளப்பக்கத்தில், “எனக்கு தற்காலிக மறதி நோய் இருப்பது ஏழு வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. அன்று முதல் மருந்து சாப்பிட்டு வருகிறேன். அதனால் பொதுக்கூட்டங்களுக்கு என்னை அழைக்க வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். என் நினைவாற்றலும், வாசிக்கும் திறனும் மற்றும் கற்பனை திறனும் உள்ள வரை நான் எழுதுவேன்” என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது அவர், “பூமியில் எனக்கு மிகக் குறுகிய காலமே உள்ளது. இது குறித்து எனக்கு ஏற்கனவே எச்சரிக்கை மணி அடித்து விட்டது. ஆகையால் நான் அனைத்து துறைகளிலிருந்தும் ஓய்வு பெற விரும்புகிறேன். எனது பணியின் காரணமாக கணினியில் அதிகநேரம் செலவழிக்கவேண்டி இருக்கிறது. இதை தவிர்க்கும் சூழலில் நான் இருக்கிறேன்.
ஆகையால் அய்யப்பபாணிகர் அறக்கட்டளை, ஆத்தூர் ரவிவர்மா அறக்கட்டளை, சாகித்ய அகாடமி, தேசிய மனிதநேய அறக்கட்டளை என ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பல்வேறு பதிப்பகங்கள் என்னிடம் ஒப்படைத்த எடிட்டிங் பணிகளில் இருந்து விலகிவிட்டேன்” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.