ஒரு கிலோ கோழி ரூ.87மேல் விற்றால் கடும் நடவடிக்கை

ஒரு கிலோ கோழி ரூ.87மேல் விற்றால் கடும் நடவடிக்கை

ஒரு கிலோ கோழி ரூ.87மேல் விற்றால் கடும் நடவடிக்கை
Published on

ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், கேரளாவில் ஒரு கிலோ கறிக்கோழியின் விலை, 150 ரூபாய் என எகிறி விட்டது. எனவே, கோழி கறி ஒரு கிலோ 87 ரூபாய் என்ற விலைக்கு மேல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கேரள மாநிலத்தில் ஜி.எஸ்.டி., அமலுக்கு வருவதற்கு முன், கறிக்கோழி மற்றும் கோழி தீவனத்திற்கு 14.5 சதவீத, 'வாட்' விதிக்கப்பட்டு இருந்தது. ஜூலை, 1ம் தேதி ஜி.எஸ்.டி., அமலுக்கு பின் கறிக்கோழி, பூஜ்ஜியம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, கோழிக்கறிக்கு வரி ஏதும் கிடையாது. இதன் காரணமாக, கேரளாவில் கறிக்கோழி விலை குறைந்து அதை வாங்குபவர்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவில் கறிக்கோழியின் தட்டுப்பாடு அதிகரித்து, அதன் விலை, ஒரு கிலோ 150 ரூபாய் வரை எகிறியுள்ளது. தற்போது இந்த விஷயத்தில் கேரள மாநில அரசு தலையிட்டுள்ளது. மாநில நிதி அமைச்சர் டி.எம்.தாமஸ் கூறுகையில், ''ஜி.எஸ்.டி., அமலானதை காரணம் காட்டி, வர்த்தகர்கள் கூடுதல் லாபம் பார்க்க துவங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் திங்கட்கிழமை முதல், ஒரு கிலோ கறிக்கோழியை, 87 ரூபாய்க்கு மேல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றார்.

இது குறித்து, கேரள கோழி பண்ணை மற்றும் வர்த்தக சங்க நிர்வாகி கவிகுமார் கூறுகையில், '' கடந்த ஒரு வாரத்தில், ஒரு கோடி கிலோ கறிக்கோழி விற்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை அதிகரித்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மாநில நிதி அமைச்சர் கூறுவது போல், ஒரு கிலோகறிக் கோழியை, 87 ரூபாய்க்கு விற்பது சிரமம்,'' என்றார். கேரளாவிற்கு தேவையான கறிக்கோழிகளில்,  ஐந்தில் ஒரு பங்கு தமிழகத்தில் இருந்து செல்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு கிலோ கோழிக்கறி 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com