
கேரளாவில் இந்த வருடம் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இது கேரள மக்கள் வாழும் தமிழ் நாட்டிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் நடைபெறும். அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு செலவிடும் தொகையை வெள்ள நிவாரண பணிகளுக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.