ஹேமா கமிட்டி அறிக்கை | 35 வழக்குகளைக் கைவிட கேரள காவல்துறை முடிவு!
2017ஆம் ஆண்டு நடிகர் திலீப்பால் நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்வுக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு பிரபலமான நடிக்கைக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு என்ன நடக்கும் என்ற வகையில், நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கை, மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. மேலும், பல்வேறு மலையாள நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே, ஹேமா கமிஷன் அறிக்கையில் AMMA கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் பலரது பெயர்கள் இடம்பெற்ற நிலையில் அவ்வமைப்பு கூண்டோடு ராஜினாமா செய்தது. மேலும், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு 7 உறுப்பினர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள திரை பிரபலங்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் இருந்தனர். மேலும், அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மலையாளத் திரையுலகில் பாலியல் அத்துமீறல் மற்றும் பாகுபாடு குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதிவான 35 வழக்குகளைக் கைவிட கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது. ஆதாரங்களைத் திரட்ட முடியாததாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஒத்துழைக்காததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்குகள் நிரந்தரமாக கைவிடப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம் அளிக்க முன்வரும்போது அவை மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பதிவு செய்யப்பட்ட மேலும் 70 வழக்குகள் விசாரணையில் உள்ளன, அவற்றில் 25 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.