பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எஃப்.ஐ.ஆர் கட்டாயம்: கேரள காவல்துறை சுற்றறிக்கை

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எஃப்.ஐ.ஆர் கட்டாயம்: கேரள காவல்துறை சுற்றறிக்கை
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எஃப்.ஐ.ஆர் கட்டாயம்: கேரள காவல்துறை சுற்றறிக்கை

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறை கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரிவுகளை மேற்கோளிட்டு கேரள மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹெரா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

கேரள மாநில காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹெரா, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கட்டாய நடவடிக்கை எடுக்குமாறு, துறைக்குள் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்தல், தடயவியல் சோதனைகளுக்கான ஆதாரங்களை சேகரித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்தல் ஆகியவை அடங்கும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்  பிரிவு 154 (1) இன் கீழ் 'நடவடிக்கை எடுக்கக்கூடிய குற்றங்களில் (காவல்துறை உத்தரவாதமின்றி கைது செய்யலாம், நீதிமன்ற அனுமதியின்றி விசாரணையைத் தொடங்கலாம்) கட்டாயமாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்குகள் நடவடிக்கை எடுக்கக்கூடிய குற்றங்களின் கீழ் வருகின்றன. எனவே காவல் நிலையத்தின் எல்லைக்கு வெளியே குற்றம் நடந்தால், காவல்துறையினர் 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்யலாம். இந்த வழக்கை பின்னர் 24 மணி நேரத்திற்குள் அதிகார வரம்பிற்குரிய காவல்நிலையத்திற்கு மாற்ற முடியும். எந்தவொரு காவல் நிலையமும் இத்தகைய வழக்கை பதிவு செய்ய மறுக்க முடியாது.

"வழக்கின் விசாரணை மற்றும் சோதனைகளின்போது பாதிக்கப்பட்டவர் கடுமையான சமூகப் பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தைக்கூறி, காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டவோ / தடுக்கவோ / ஊக்கப்படுத்தவோ கூடாது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் உரிமைகள் எவையெவை, ஒரு பெண் மருத்துவ அதிகாரியால் செய்யப்படும் உடல் பரிசோதனையின் அவசியம், ஒரு பெண் நீதிபதி அறிக்கையை பதிவு செய்தல், ஒரு சிறப்பு வழக்கறிஞரின் சேவைகள் ஆகியவற்றைப்பற்றி சுற்றறிக்கை கூறுகிறது. ஒரு பெண் காவல்துறை அதிகாரி இந்த உரிமைகளை பெண் புகார்தாரருக்கு விளக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத்திற்கு பலியான ஒரு பெண்ணின் அறிக்கை, ஒரு பெண் போலீஸ்  அல்லது நற்பெயர் பெற்ற பெண்ணின் முன்னிலையில் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இச்சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரிவு 166 (ஏ) (சி) – இன் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்கள் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தவறியதற்காக ஒரு பொது ஊழியருக்கு தண்டனை அளிக்கிறது என்றும் சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

சிஆர்பிசியின் 173 வது பிரிவின் கீழ், பாலியல் வன்கொடுமை தொடர்பான போலீஸ் விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இதை கண்காணிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு பாலியல் குற்றங்களுக்கான புலனாய்வு கண்காணிப்பு அமைப்பு என்ற ஆன்லைன் போர்ட்டலை உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையில் பாதிக்கப்பட்டவர் 'பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் 24 மணி நேரத்திற்குள் சம்மதத்தின் கீழ் பரிசோதிக்கப்படுவார்' என்று சி.ஆர்.பி.சி.யின் பிரிவு 164 ஏ கூறுகிறது என்பதுபோன்ற பல சட்டப்பிரிவுகளை இந்த சுற்றறிக்கை விளக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com