'நாங்கள் சபரிமலை செல்வதை கேரள போலீஸார் விரும்பவில்லை' மனிதி அமைப்பு குற்றச்சாட்டு
தாங்கள் சபரிமலை செல்வதை கேரள போலீசாரே விரும்பவில்லை என சபரிமலைக்கு செல்ல முயன்ற மனிதி அமைப்பைச் சேர்ந்த தமிழக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல ஏற்கெனவே முயன்றனர். ஆனால் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கி வருகின்றனர். இதனிடையே சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் சிரமங்களை அனுபவிக்க நேர்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சபரிமலைக்கு செல்ல முயன்ற மனிதி அமைப்பை சேர்ந்த 11 தமிழக பெண்கள், பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ காலை 4 மணிக்கு முன்பே பம்பைக்கு சென்றுவிட்டோம். ஆனால் 30 போராட்டக்காரர்கள் இருப்பதாக கூறி எங்களை அடுத்த அடி நகர விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஒருவேளை 30 போராட்டக்காரர்கள் இருந்தால் கூட அவர்களை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாதா..? போலீசார் விரும்பியிருந்தால் எங்களை சன்னிதானம் வரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றிருக்க முடியும். ஆனால் போலீசாரே அதனை விரும்பவில்லை.
முதலில் பக்தர்கள் ஐயப்ப கோஷங்களை மட்டும்தான் எழுப்பிக் கொண்டிருந்தனர். எங்களை துன்புறுத்தவோ, தாக்கவோ முயற்சிக்கவில்லை. ஆனால் அதன்பின் போலீசார் தான் சிக்னல் கொடுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினர். இதனால் அனைவரும் ஓடினர். இதனால் ஒரு குழப்பமான சூழ்நிலை உண்டானது. நாங்கள் திரும்பவும் காரணமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் நாங்கள் ரயிலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற தகவலையும் போலீசார் முதலிலேயே வெளியே சொல்லிவிட்டனர். அது போராட்டக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. அவர்கள் எங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்றுதான் நினைத்தார்களே தவிர எங்களுடைய உரிமைகளை நாங்கள் பெற தேவையான பாதுகாப்பினை அவர்கள் வழங்கவில்லை. அத்துடன் பாதுகாப்பு காரணங்களுக்காக எங்களை வெளியே சென்று உணவு கூட வாங்க விடவில்லை. அதுமட்டுமின்றி உடல் உபாதைகளை கூட கழிக்க முடியாமல் சிரமப்பட்டோம்” என தெரிவித்தனர்.