‘குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள்’ லினியின் உருக்கமான கடிதம்
நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த செவிலியர் லினி தனது கணவருக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார்.
கேரள மாநிலத்தில் ‘நிபா வைரஸ்’ தாக்குதலினால் இதுவரை 10பேர் உயிரிழந்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 3பேர் இந்த வைரஸ்க்கு பலியாகினர். இவர்கள் பெரம்ப்ரா தாலுகாவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களை லினி என்ற செவிலியர் கவனித்து வந்துள்ளார். லினியும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானார். இரவு 2 மணியளவில் உயிரிழந்த லினியின் உடல், அதிகாலையில் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படாமல் அவசரமாக சீல் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.
லினிக்கு திருமனம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனக்கு மரணம் நிகழப்போவதை அறிந்த லினி தனது கணவருக்கு உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில் “ சாஜி சேட்டா (Saji Chetta), நான் மரணத்தை நோக்கி போய்கொண்டு இருக்கிறேன். நான் உங்களை காண முடியாது என எண்ணுகிறேன். மன்னித்து விடுங்கள். நமது குழந்தைகளை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள். ஒன்றும் அறியாத நமது குழந்தைகளை உங்களுடனே அழைத்து செல்லுங்கள். தந்தை இல்லாமல் அவர்கள் தனியாக இருக்கக்கூடாது” என எழுதியுள்ளார்.