கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்.. விமர்சனத்தைச் சந்தித்த பாஜக தலைவர்!
சத்தீஸ்கரில் கடந்த ஜூலை 26ஆம் தேதி அசிசி சகோதரிகள் மேரி இம்மாகுலேட் (ASMI) அமைப்பைச் சேர்ந்த இரண்டு கேரள கன்னியாஸ்திரிகளான சகோதரி வந்தனா பிரான்சிஸ் மற்றும் சகோதரி பிரீத்தி மேரி ஆகியோர் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 19 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் மற்றும் ஒரு இளைஞருடனும் துர்க் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த இளம்பெண்களை கட்டாய மதமாற்றம் செய்யும் வகையில் கடத்திச் செல்வதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கன்னியாஸ்திரிகளைக் கைது செய்தனர். இதற்கு கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு விளக்கம் அளித்தது. நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களும் வெடித்தன. மேலும், சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கிடைக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தி இருந்தார். மேலும், கேரளாவைச் சேர்ந்த ஆளும் முன்னணி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கன்னியாஸ்திரிகளின் நீதிக்கான காரணத்தை எடுத்துரைத்தனர். இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு சத்தீஸ்கரில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. அதேநேரத்தில், கன்னியாஸ்திரிகள் ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகளை கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றுள்ளார். சத்தீஸ்கர் பாஜக அரசு கன்னியாஸ்திரிகளை கைது செய்த நிலையில், கேரளா பாஜக தலைவர் அவர்களை நேரில் சென்று வரவேற்ற இரட்டை நிலைப்பாட்டை சி.பி.எம்., காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.