சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட இரண்டு கன்னியாஸ்திரிகள்... வெடிக்கும் கண்டனம்!
சத்தீஸ்கரில் கடந்த ஜூலை 26ஆம் தேதி அசிசி சகோதரிகள் மேரி இம்மாகுலேட் (ASMI) அமைப்பைச் சேர்ந்த இரண்டு கேரள கன்னியாஸ்திரிகளான சகோதரி வந்தனா பிரான்சிஸ் மற்றும் சகோதரி பிரீத்தி மேரி ஆகியோர் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 19 வயதுக்குட்பட்ட மூன்று பெண்கள் மற்றும் ஒரு இளைஞருடனும் துர்க் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டிக்கெட் பரிசோதகர் மூன்று பெண்களிடம் டிக்கெட் எங்கே என்று கேட்டநிலையில், கன்னியாஸ்திரிகளிடத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, இரண்டு கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அங்கே இருந்த பஜ்ரங் தளத்தின் ஜோதி சர்மா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கன்னியாஸ்திரிகள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யும்படி போராட்டம் நடத்தினர். பின்னர், கன்னியாஸ்திரிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் சத்தீஸ்கர் மத சுதந்திரச் சட்டம், 1968 ஆகியவற்றின் கீழ் ஆள் கடத்தல் மற்றும் மத மாற்றம் ஆகிய இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கன்னியாஸ்திரிகளுடன் இருந்த மூன்று பெண்கள் அரசு நடத்தும் காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். அதே நேரத்தில் கன்னியாஸ்திரிகளும் ஒரு இளைஞரும் ஆகஸ்ட் 8 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராய்ப்பூர் மறைமாவட்டத்தின் விகார் ஜெனரல் பாதிரியார் செபாஸ்டியன் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ” அந்த மூன்று பெண்களை ஆக்ராவில் உள்ள கான்வென்ட்களில் வீட்டு வேலைக்காக சேர்க்க கன்னியாஸ்திரிகள் அழைத்து சென்றனர். இந்தப் பெண்களும் மாத சம்பளம் ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை சமையலறை உதவியாளர்களாக பணியாற்ற அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதங்களும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கன்னியாஸ்திரிகளின் கைதை எதிர்த்து கிருஸ்துவ மற்றும் சிறுபான்மை அமைப்பினைச் சேர்ந்த பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கை எதிராக கேரளா மற்றும் டெல்லியில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளுக்கு நீதி கிடைக்க பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக ஆளும் சத்தீஸ்கரில் இரண்டு கேரள கன்னி யாஸ்திரிகள் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதற்கு கேசிபிசி விஜிலென்ஸ் ஆணையம் என்னும் கேரள கத்தோ லிக்க ஆயர்களின் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத மாற்றம் மற்றும் மனித கடத்தல் தொடர்பாக பஜ்ரங் தள ஆர்வலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், துர்க் காவல்துறையினர் கன்னியாஸ்திரிகள் வந்தனா பிரான்சிஸ் , பிரீத்தி மேரி ஆகியோரை பொய்யான வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவர்கள் மற்றும் மிஷ னரிகள் மீது அதிகரித்து வரும் வெறுப்பின் ஒரு பகுதியாகும். தீவிரவாதக் குழுக்கள், மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது நியாயமற்றது மற்றும் நாட்டில் மத சிறுபான்மையினரின் அரசி யலமைப்பு உரிமைகளுக்கு கடு மையான அச்சுறுத்தலை ஏற் படுத்துகிறது.
கத்தோலிக்க மிஷனரிகள் கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுவதில்லை. கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் திருச்சபையின் சேவைகள் தொண்டு மற்றும் பொது நன்மைக்கான உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கன்னியாஸ்திரிகளை தன்னிச்சையாக கைது செய்தவர்கள் மீது சட்ட நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற அதிகார துஷ்பிரயோ கத்தைத் தடுக்க தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் (UCF) தொகுத்த தரவுகளின்படி, கிறிஸ்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவங்கள் 2014 இல் 127 வழக்குகளிலிருந்து 2024 இல் 834 ஆக உயர்ந்துள்ளன. இது சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான திட்டமிட்ட மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் பிரச்சாரமாக பலர் கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின்
"சத்தீஸ்கரில் பஜ்ரங் தளம் அமைப்பினரால் கேரள கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தலுக்கும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகியுள்ளது மிகவும் கவலையளிக்கிறது.
இந்த நடவடிக்கை வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் சிறுபான்மையினர் கண்ணியத்திற்கும் சம உரிமைகளுக்கும் தகுதியானவர்கள்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ சத்தீஸ்கரில் இரண்டு கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் குறிவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது நீதி அல்ல, இது பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சி. இது ஒரு ஆபத்தான போக்கை பிரதிபலிக்கிறது: இந்த ஆட்சியின் கீழ் சிறுபான்மையினரை திட்டமிட்டு துன்புறுத்தப்படுகின்றனர்.
இன்று நாடாளுமன்றத்தில் யுடிஎஃப் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். மத சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமை. அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.