kerala monk wants rule for men to remove upper wear entering temples
model imagex page

கேரளா|“மேல்சட்டை இல்லாமல் கோயிலுக்குள் நுழையும் முறை வேண்டுமா?” மடாதிபதி கருத்துக்கு பாஜக எதிர்ப்பு!

கேரளாவில் மேல் சட்டை இல்லாமல் கோயிலுக்குள் நுழையும் முறைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
Published on

"மேல்சட்டை அணியக்கூடாது என்பது சமூக நீதிக்கு எதிரானது!"

இந்தியாவில் பல்வேறு விதமான கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான மதச் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வேஷ்டிகள் அணிந்து மேல் சட்டை இல்லாமல் செல்ல வேண்டும் என்ற விதிகள் உள்ளன. அதன்படியே, பக்தர்கள் இன்றும் கோயிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேல் சட்டை இல்லாமல் கோயிலுக்குள் நுழையும் முறைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

kerala monk wants rule for men to remove upper wear entering temples
சுவாமி சச்சிதானந்தாx page

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா நகராட்சியில் உள்ள சிவகிரி ஸ்ரீநாராயண குரு மடம் சார்பில், சமீபத்தில் யாத்திரை மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அம்மடத்தின் தலைவரான சுவாமி சச்சிதானந்தா, ”கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள், மேல்சட்டை அணியக்கூடாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. அந்த முறையைக் கைவிட வேண்டும். ஆண்கள் (பிராமணர்கள்), பூணூல் அணிவதை உறுதி செய்வதற்காக ஆடைகளை அகற்றும் நடைமுறை கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை ஸ்ரீநாராயண குருவின் பிரசங்கங்களுக்கு எதிரானது. தற்போதுகூட, சில கோயில்கள் இதைப் பின்பற்றுவது வருத்தமாக இருக்கிறது.

சில கோயில்களில், பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சில ஸ்ரீநாராயணர் கோயில்களும் இதைப் பின்பற்றுவதைக் காணும்போது, ​​​​நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அதுமட்டுமின்றி, பல ஸ்ரீ நாராயணிய கோயில்களிகூட மேல் ஆடையை அகற்றும் வழக்கத்தை கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளன. இது எப்படியும் சரி செய்யப்பட வேண்டும். ஏனென்றால், கோயில் கலாசாரத்தை நவீனப்படுத்தியவரே ஸ்ரீ நாராயண குருதான்” என வலியுறுத்தினார்.

kerala monk wants rule for men to remove upper wear entering temples
பினராயி விஜயன்pti

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன் அதை ஆமோதித்துப் பேசினார். மேலும், "இது சமூகச் சீர்திருத்தத்திற்கான குறிப்பிடத்தக்க தலையீடாக கருதப்படலாம். எனினும், எந்த மாற்றங்களும் தன்னார்வமாக இருக்க வேண்டும், கட்டாயமாக இருக்கக்கூடாது” எனப் பரிந்துரைத்தார்.

வரவேற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன்

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “தேவசம் போர்டு ஒன்றின் நிர்வாகிகள் என்னைச் சந்தித்தனர். அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், மேல்சட்டை அணியக்கூடாது என்ற நடைமுறையை கைவிடப் போவதாக கூறியுள்ளனர். இது வரவேற்கக்கூடிய முடிவு” எனத் தெரிவித்தார். ஆனால், அவர் எந்த தேவசம் போர்டு என்பதை தெரிவிக்கவில்லை.

மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என பாஜக கோரியுள்ளதே” என்ற கேள்விக்கு, ”அது விவாதிக்கப்படட்டும். ஆனால், அதை தேவசம் போர்டுதான் முடிவு செய்ய வேண்டும். அரசு அல்ல” எனத் தெளிவுபடுத்தினார்.

ஜி.சுகுமாரன் நாயர்
ஜி.சுகுமாரன் நாயர்x page

பினராயி விஜயன் கருத்துக்கு கண்டனம்

ஆயினும் பினராயி விஜயன் கூறிய இந்த கருத்துக்கு, என்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் நாயர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கோயில்களில் சட்டையைக் கழற்றுவதற்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் கூறிய கருத்து தவறானது. காலங்காலமாகப் பின்பற்றி வரும் பழக்கவழக்கங்களை ஏன் மாற்றச் சொல்கிறார்? சபரிமலையில் சட்டை அணிந்து தரிசனம் செய்யலாம்.

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உண்டு. இதுபோன்ற விஷயங்களில் முதல்வர் ஆதரவு தெரிவித்திருக்கக்கூடாது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் பழக்கவழக்கங்களில் யாரும் தலையிடுவதில்லை. இந்த நடைமுறைகளை விமர்சிக்க சிவகிரிக்கோ அல்லது முதல்வருக்கோ தைரியம் உள்ளதா? மன்னர் பத்மநாபன் நீண்டகாலத்திற்கு முன்பே சமூகச் சீர்திருத்தம் செய்துள்ளார். நீங்கள் முடிவுசெய்து செயல்படுத்துங்கள். எங்களின் முடிவுகள் இப்படித்தான் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஐந்து முக்கிய தேவசம் போர்டுகள் உள்ளன. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சின், கூடல்மாணிக்கம் ஆகிய ஐந்து தேவசம் போர்டுகளின் கீழ், 3,000 கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com