கேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் !

கேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் !
கேன்சரால் அழகை இழந்த காதலி: உண்மைக் காதலை நிரூபித்த காதலன் !

கேன்சரால் பாதிக்கப்பட்ட காதலியை திருமணம் செய்து அவருக்காகவே வாழும் உண்மை காதலனின் கதை.

அவர் பெயர் சச்சின் (23). அந்த பெண் பெயர் பாவ்யா (23). கேரளாவில் பிறந்த இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். கடந்த ஒருவருடத்திற்கு முன்பு கேரளா, நிலம்பூரில் உள்ள டிப்ளோமா கல்லூரியில் கடந்த ஆண்டு சேர்ந்தனர். அங்கு இருவரும் ஒரே வகுப்பில் படித்து வந்தனர். 5 மாதமாக இருவரும் நட்பாக பழகி வந்தனர். அவ்வப்போது பாவ்யாவிற்கு லேசான முதுகுவலி ஏற்பட்டுள்ளது. அது சாதாரண வலியாக இருக்கும் என அலட்சியாக விட்டுள்ளார். இதுதொடர்பாக சச்சினிடம் கூற அவர் மருத்துவமனையில் சோதிக்கலாம் எனக்கூறியுள்ளார். அதற்குள் இவர்களின் நட்பு பாவ்யாவின் வீட்டிற்கு தெரியவந்தது. 

‘சச்சினை நீ பார்க்கக்கூடாது. அவனுடன் பேசக்கூடாது’ என பாவ்யாவின் வீட்டில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாவ்யா சச்சினை சந்திப்பதை தடுத்துள்ளனர். அந்தப் பிரிவில் தான் இருவரும் தங்கள் காதலை உணர்ந்துள்ளனர். பின்னர் பாவ்யா ஒரு சிறிய நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்துள்ளார். அத்துடன் தனது பெற்றோர் கூறியதை மீறி பாவ்யா சச்சினுடன் பழகினார். இரண்டு மாதங்களில் இருவரும் காதலை சொல்லி, காதலர்களாகிவிட்டனர். இந்நிலையில் பாவ்யா தனக்கு முதுகுவலி இருப்பதாக சச்சினிடம் கூறியுள்ளார். இருவரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் பாவ்யாவின் முதுகெலும்புப் பகுதியில் கேன்சர் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் முதலில் கேன்சர் விவகாரத்தை சச்சினிடம் தான் கூறியுள்ளனர். அவர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். 

அந்த நிமிடத்தில் சச்சின் ஒரு முடிவுக்கு வந்தார். தனது காதலியை எப்படியாவது இந்தக் கேன்சரிலிருந்து காப்பாற்ற வேண்டும் என தீர்மானித்தார். கேன்சர் விஷயம் பாவ்யாவிற்கும் தெரியவந்தது. அப்போது ‘நீ ஒருபோதும் கவலைப்படாதே, பயப்படாதே. நான் இருக்கிறேன்’ என சச்சின் தைரியம் கூறியுள்ளார். அத்துடன் ‘நான் முன்பை விட தற்போது உன்னை இன்னும் அதிகம் காதலிக்கிறேன்’ எனக்கூறியுள்ளார். தொடர்ந்து பாவ்யாவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சச்சின். அதன்பின்னர் பாவ்யாவை, சச்சின் எப்போதும் பிரியாமல் கூடவே இருந்துள்ளார். இந்த விஷயம் எதுவும் பாவ்யா மற்றும் சச்சின் வீட்டிற்கு தெரியாது. பரிசோதனைகள் முடிந்து கேன்சர் சிகிச்சை தொடங்கியுள்ளது. அடிக்கடி சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருந்ததால், பாவ்யாவுடன் தங்குவதற்கு சச்சின் முடிவு செய்துள்ளார். பாவ்யாவை திருமணம் செய்ய சச்சின் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் முழு விஷயமும் இரு வீட்டினருக்கும் தெரியவந்துள்ளது. இரண்டு குடும்பமும் இவர்களது காதலைக் கண்டு வியப்படைந்துள்ளனர். அத்துடன் காதலுக்கு பச்சைக்கொடியும் காட்டியுள்ளனர். அத்துடன் நண்பர்களும் தங்கள் முழு ஒத்துழைப்பை தந்துள்ளனர். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்பின்னர் தொடர்ந்து 5 மாதங்கள் பாவ்யா சிகிச்சை பெற்றுள்ளார். அவருடனே சச்சின் எப்போதும் இருந்துள்ளார். சிகிச்சையால் பாவ்யா உடல் எடை அதிகரித்துள்ளார். அவரது நீளமான கூந்தலையும் இழந்தார். அவரது தோற்றத்தின் அழகு முற்றிலும் மாறிப்போனது. இதையெல்லாம் கண்ட சச்சின், “எங்கள் காதல் உடல்ரீதியான பார்வையில் இருந்து வந்தது இல்லை. அது எங்க இதயங்களில் இருந்து தோன்றியது” எனக் கூறியுள்ளார். 

மாதத்தில் 10 நாட்கள் பாவ்யா மற்றும் சச்சின் மருத்துவமனையில் இருந்துள்ளனர். இந்நிலையில் சச்சின் பாவ்யாவை திருமணம் செய்துகொள்ள நினைத்துள்ளார். கடந்த 6ஆம் தேதி இருவருக்கும் நிலம்பூரில் உள்ள கோயில் ஒன்றில் திருமணம் நடந்தது. திருமணம் தொடர்பாக பேசிய சச்சின், “நாங்கள் இருவரும் எங்கள் பெற்றோரின் விருப்பத்துடன் தான் திருமணம் செய்துகொண்டோம். நான் எப்போது கூடவே இருந்தால் அவள் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அதனால் இனி அவளை பிரியப்போவதே இல்லை” எனக்கூறியுள்ளார். அத்துடன் பாவ்யாவிற்காக தனது மேல்படிப்பை சச்சின் தியாகம் செய்துவிட்டார்.

சச்சின் குடும்பம் நடுத்தர வர்க்கம். பாவ்யாவின் குடும்பம் ஏழை. இதனால் பாவ்யாவின் சிகிச்சை பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பாவ்யாவின் சிகிச்சைக்காக தினந்தோறும் கூலி கிடைக்கும், கட்டட வேலைக்கு சச்சின் சென்றுள்ளார். அதில் பணத்தைக்கொண்டு பாவ்யா சிகிச்சைக்கு செலவு செய்துள்ளார். இதுதவிர இருவரது நண்பர்களும் தங்களால் முடிந்த பண உதவியை செய்துள்ளனர். இந்நிலையில் வரும் திங்கட்கிழமை பாவ்யாவிற்கு கேன்சர் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக கூறும் சச்சின், “எனது நண்பர்கள் எனக்கு பண உதவி செய்துள்ளனர். அதைவிட எனக்கு மன ரீதியாக ஆறுதலும் கூறியுள்ளனர். அவர்கள் அளித்த பாசமும், தைரியத்தையும் வார்த்தைகளால் கூற இயலாது. நாங்கள் எதிர்காலத்தில் எப்படி வாழப்போகிறோம் என தெரியாது. ஆனால் இந்த நோயிடம் இருந்து அவளை மீட்டு வருவேன். எந்த நிலையிலும் நான் அவளுக்காக போராடுவதை நிறுத்தமாட்டேன். திங்கட் கிழமை நடக்கும் சிகிச்சையில் அவள் கண்டிப்பாக குணமடைவாள். அதன்பின்னர் நாங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்” என கண்கள் கலங்கியபடி, தையரிமாக தெரிவித்துள்ளார். 

(Courtesy : The News Minute)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com