பள்ளிகளில் சேர தடுப்பூசி கட்டாயம்: கேரள அரசு அதிரடி
கேரள மாநிலத்தில் பள்ளிகளில் சேருவதற்கு தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது தடுப்பூசி போட்டதற்கான சான்றுகளை அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சுகாதார கொள்கையை வெளியிட்டு பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, மாநிலத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், முழு நோய் தடுப்பை உறுதி செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறினார். மேலும், “சுகாதாரத்தை பொறுத்தவரை, கேரளா மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக உள்ளது. இந்தச் சாதனையை முறியடிக்க சிலர் திட்டமிடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தடுப்பூசிக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
கேரளாவில் தடுப்பூசிக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட வட கேரள மாவட்டங்களில் கடந்த ஆண்டு தடுப்பூசியால் சில பிரச்னைகள் எழுந்ததாக கூறப்படுகிறது.