
கேரளா மாநிலம் பாலக்காட்டில் நீடிக்கும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் அங்கு பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு நிலவி வருகிறது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புழா, வாளையார் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தவிடப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலக்காடு - மலம்புழா பகுதியில் தொடர்ந்து நான்காவது நாளாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரளாவில் கனமழை, வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது. கேரள முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவல் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கேரளா 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ளப் பாதிப்பை எதிர் கொண்டுள்ளது. 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. 324 பேர் உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் 1500 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று அந்த ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள முதலமைச்சர் அலுவலகம் சார்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு எண்ணும் பதிவிடப்பட்டுள்ளது.