இனி தண்ணீர் பாட்டிலின் விலை ரூ.13 தான் - கேரள அரசு உத்தரவு
கேரளாவில் இனி தண்ணீர் பாட்டிலை ரூ.13க்கு தான் விற்க வேண்டும் என அம்மாநில அரசு விலை நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பாட்டில்களின் விலை ரூ.20 மற்றும் ரூ.25 என விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பேருந்து நிலையங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரத்திற்கு ஏற்றாற்போல கூடுதல் விலைக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலை கேரளாவிலும் உள்ளது. இதனை மாற்ற அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் முடிவில் தண்ணீர் என்பது அத்தியாவசியப் பொருள்களுள் ஒன்று என்ற அடிப்படையில், அதற்கு அரசே விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக கேரளாவில் உள்ள தண்ணீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுடன் அம்மாநில அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது ரூ.12க்கு ஒரு பாட்டில் தண்ணீரை விற்க வேண்டும் என கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் இறுதியாக ரூ.13க்கு ஒரு பாட்டில் தண்ணீரை விற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனை கேரள அரசு உத்தரவாக பிறப்பித்துள்ளது. மேலும், விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் இந்திய தரச்சான்று தன்மையுடன் இருக்க வேண்டும் என அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.