வேடனை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு..!
கேரளா காவல்துறையால் தேடப்பட்டு வரும் ராப் பாடகர் வேடனை கைது செய்ய, கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கேரள ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேற்றுமை, அடக்குமுறைகளுக்கு எதிராக தனது ராப் இசை பாடல்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் கேரளாவைச் சேர்ந்த பாடகர் வேடன். அவரது பாடல் வரிகளில் இருக்கும் வார்த்தைகள், அடித்தட்டு மக்களையும், அவர்களின் வலிகளையும் பறை சாற்றும் வகையில் அமைந்திருப்பதால், பலருக்கும் பாடகர் வேடனுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம் தேச ஒற்றுமை, நல்லிணக்கத்திற்கு எதிராக அவர் செயல்படுவதாகவும் மற்றொரு தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படியான நிலையில், பாடகர் வேடன் மீது இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். இரண்டு பெண்களுமே பாடகர் வேடன் தங்களை பயன்படுத்திக் கொண்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக பாடகர் வேடன் பாலியல் புகார்களைச் சந்தித்து வருவது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மலையாள திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்து வேடன் தன்னை பாலியல் சுரண்டல் செய்ததாக ஒரு இளம் பெண் மருத்துவர் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்ததை அடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்த கேரள போலீஸார் வேடனை கைது செய்வதற்காக தேடிவந்தனர்.
இதை எதிர்த்து, வேடன் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்தார். அந்த மனுவில், இருவருக்கும் இடையிலான உறவு பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது என்றும்
தெரிவித்திருந்தார். இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், வேடனை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து
உத்தரவிட்டது.