இந்து பெயரா, கிறிஸ்வத பெயரா? குழந்தைக்கு பெயர் சூட்டிய ஹைகோர்ட்!
அவ்வப்போது வித்தியாசமான வழக்குகள் நீதிமன்றத்துக்கு வருவது வழக்கம். இந்த வழக்குக் கூட வித்தியாசமான ஒன்றுதான்!
மதம் மாறி திருமணம் செய்துகொண்டவர்கள் தங்கள் குழந்தைக்கு அவரவர்கள் மதப் பெயரை வைக்க வேண்டும் என்று வற்புறுத்த, விவகாரம் நீதிமன்றம் வரை வந்துவிட்டது.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் நிர்மல். இவர் மனைவி மேரி. (இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது). வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து 2010-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவகாரத்து பெற முடிவு செய்துள்ளனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெயர் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தனர்.
இவர்களின் இரண்டாவது குழந்தை 2013-ம் ஆண்டு பிறந்தது. மேரியின் பராமரிப்பில் இருக்கும் அந்த குழந்தைக்கு, கிறிஸ்தவ வழக்கப்படி, ஜோகன் மணி சச்சின் என்ற பெயரில் ஞானஸ்நானம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த பெயரையே குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று மேரி வீட்டிலும், குழந்தை பிறந்த 28வது நாளில் நடந்த பெயர் சூட்டு விழாவில் இந்து முறைப்படி ‘அபிநவ் சச்சின்’ என்ற பெயரை சூட்டினோம். அதுதான் பெயராக இருக்க வேண்டும் என்று நிர்மல் தரப்பிலும் கூறப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்ற பெயரை வைத்தார். மேரியை திருப்திப்படுத்த ‘ஜோகன்’ என்றும் நிர்மலைத் திருப்திப்படுத்த ‘சச்சின்’ என்றும் வைத்ததாக நீதிபதி கூறியுள்ளார். இந்த பெயரில் 2 வாரங்களுக்குள் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கும் உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி.