சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில், தினசரி ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 5,000 ஆயிரமாக குறைத்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், தினசரி ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 5,000 ஆயிரமாக குறைத்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சபரிமலையில், நடை திறக்கப்பட்ட கடந்த 16ஆம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்பாட் புக்கிங் எனப்படும் உடனடி முன்பதிவில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அதிகப்படியான பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கியதுதான், நெரிசலுக்கு முக்கிய காரணம் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், தினசரி ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 5,000 ஆயிரமாக குறைத்து உத்தரவிட்டது. மேலும், எருமேலி பெருவழிப்பாதை, சத்திரம் புல்லுமேடு ஆகிய பாரம்பரிய கானகப் பாதைகள் வழியே தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரமாக குறைத்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், இந்த உத்தரவு வரும் திங்கட்கிழமை (நவ.24) வரை அமலில் இருக்கும் என்றும் நீதிமன்றம் தனதுஉத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே மண்டல - மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டதில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் இதுவரை சுமார் மூன்று லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதி 53,278 பேரும், 17ஆம் தேதி 98,915 பேரும், 18ஆம் தேதி 81,543 பேரும், நேற்று 64,574 பேரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுவரை மொத்தமாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 310 பேர் தரிசனம் செய்துள்ளனர்.

