’சிபிஎம் எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது’- கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. பின்னணி காரணம்?

’சிபிஎம் எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது’- கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. பின்னணி காரணம்?
’சிபிஎம் எம்.எல்.ஏவின் வெற்றி செல்லாது’- கேரள நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. பின்னணி காரணம்?

மதம் மாறியதால் கேரள மாநிலம் தேவிகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் அ. ராஜாவின் வெற்றி செல்லாது என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு விதித்துள்ளது.

கேரளாவில் தற்போது பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு கேரள மாநிலம் தேவிகுளம் சட்டப்பேரவை தொகுதியில் சிபிஎம் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வழக்கறிஞர் அ. ராஜாவின் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் தனித் தொகுதியான தேவிகுளத்தில், தமிழரான அ.ராஜா 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இருந்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவையின் பதவியேற்பு விழாவில், வழக்கறிஞர் அ.ராஜா தனது தாய்மொழியான தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றார். தமிழில் உறுதிமொழி கூறி பதவியேற்றதற்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இதற்கிடையில் அ.ராஜா வெற்றியை எதிர்த்து, அவருடன் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குமார், கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பட்டியல் இனத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால், அ.ராஜாவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் தேர்தலில் போட்டியிட போலியான சாதிச் சான்றிதழ் சமர்ப்பித்து அ.ராஜா போட்டியிட்டதாகவும் மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை கேரளா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, தேவிகுளம் தொகுதியில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சிபிஎம் எம்.எல்.ஏ.வான அ. ராஜா, ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறிய உயர்நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்தது.

இதனால் அ.ராஜா தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கேரள சட்டப்பேரவையில் சிபிஎம் உறுப்பினர்களின் பலம் 99-இல் இருந்து 98 ஆக குறைந்துள்ளது. சிபிஎம் மற்றும் அ.ராஜா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com