மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தை; சிகிச்சை காலத்தில் தெரிவிக்காத மருத்துவர்கள்..பெற்றோர் அதிர்ச்சி!
கேரளா: மாற்றுத்திறனாளி குழந்தை பிறந்ததற்கு காரணமான மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு
பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் குழந்தையின் வளர்ச்சி அதன் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். இதன்படி பெண்களின் மகப்பேறு காலத்தில் குழந்தையின் வளர்ச்சியைத் தெரிந்துக்கொள்ள மருத்துவர்கள் பலமுறை சிடி ஸ்கேன் செய்து பார்கின்றனர். இதில் குழந்தை குறைபாடுடன் இருந்தால், உடனடியாக மருத்துவர்களுக்கு தெரிந்துவிடும். இது குறித்து குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, அதற்கான மருத்துவசிகிச்சை அல்லது, பெற்றோர்களின் அனுமதியைப்பெற்று அடுத்தகட்ட சிகிச்சையில் இறங்குவர்.
அதனால்தான் கர்ப்ப காலத்தில் பெண்கள் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை மருத்துவர்களை சந்தித்து குழந்தையின் வளர்ச்சிப்பற்றி தெரிந்துக்கொள்வர்.
இது இப்படி இருக்க கேரளா ஆலப்புழா கடபுரம் பகுதியில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தைப் பிறந்துள்ளது. ஆனால் அக்குழந்தையின் காதுகள் மற்றும் கண்கள் இல்லாமல் வாய் திறக்காமல், கைகால்கள் வளைந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் பிறந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் குடும்பத்தினர், அம்மருத்துவமனை மருத்துவர்கள், மற்றும் ஆய்வக மருத்துவர் மீது போலிஸில் புகாரளித்துள்ளனர்.
கர்ப்பகாலத்தில் பலமுறை ஸ்கேன் செய்தும் குழந்தையின் குறைபாடுகளைப்பற்றி மருத்துவர்கள் எங்களிடம் எதுவும் கூறவில்லை. மேலும் மருத்துவர்களும் குழந்தையின் வளர்ச்சி குறித்து தெரிந்துக்கொள்ளவில்லை என்றே தெரியவருகிறது. என்று கூறிய அப்பெண்ணின் குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குழந்தையை என்னசெய்வது என்று தெரியாதநிலையில் பெண்ணின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.