“ஆர்எஸ்எஸ் குட்டையை குழப்பி மீன் பிடிக்கப்பார்க்கிறது” - பினராயி விஜயன்

“ஆர்எஸ்எஸ் குட்டையை குழப்பி மீன் பிடிக்கப்பார்க்கிறது” - பினராயி விஜயன்

“ஆர்எஸ்எஸ் குட்டையை குழப்பி மீன் பிடிக்கப்பார்க்கிறது” - பினராயி விஜயன்
Published on

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்யாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்களும், 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே செல்லலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது. வழிபாட்டில் ஆண், பெண் பேதம் இல்லை எனக்கூறி இந்தத் தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் கோயிலுக்கு செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்புக்கு பல தரப்புகளில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு முறையீட்டு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரிக்கையும் எழுந்தது. ஆனால் கோரிக்கையை நிராகரித்த முதலமைச்சர் பினராயி விஜயன், கோயிலுக்கு பெண்கள் வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தார். 

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் முதலமைச்சர் பினராயி தலைமையில் ஆலோசனைக்கூட்டத்துக்கு மாநில அரசு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்தச் சமரச ஆலோசனைக்கூட்டத்தில் பந்தளம் அரசக் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்தால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று அவர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் ஷியாலஜா விஜயன் இன்று சீராய்வு மனுத் தாக்கல் செய்தார். இதனிடையே சபரிமலை விவகாரம் குறித்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ''சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்யாது. இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் குட்டையை குழப்பி மீன் பிடிக்கப்பார்க்கிறது. சட்டம் ஒழுங்கை குலைக்கப் பார்க்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் மாநில அரசு தெளிவாக உள்ளது.

சில சக்திகள் மத உணர்வுகளை தூண்டிவிட்டு அரசாங்கத்துக்கு சிக்கலை உருவாக்க நினைக்கின்றன. எல்லா சிக்கல்களையும்  அரசு சரியாக கையாண்டு எதிர்கொள்ளும். மத்தியில் பாஜகவும், காங்கிரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரலாற்று தீர்ப்பு எனப் புகழ்கின்றனர். ஆனால் கேரளாவில் தங்களுக்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி சிக்கலை உண்டாக்குகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நீதிமன்ற தீர்ப்போடு ஒத்துப்போவதே சரியாக இருக்கும்'' என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com