மாணவ மாணவியருக்கு ஒரேமாதிரி சீருடைகள் - பாலின பேதத்தை ஒழிக்க கேரள பள்ளியின் புதிய முயற்சி!

மாணவ மாணவியருக்கு ஒரேமாதிரி சீருடைகள் - பாலின பேதத்தை ஒழிக்க கேரள பள்ளியின் புதிய முயற்சி!
மாணவ மாணவியருக்கு ஒரேமாதிரி சீருடைகள் - பாலின பேதத்தை ஒழிக்க கேரள பள்ளியின் புதிய முயற்சி!

கேரளாவின் எர்ணாக்குளம் மாவட்டத்திலுள்ள பெரம்பாவூர் பகுதியை சேர்ந்த அரசு தொடக்கப்பள்ளியொன்றில் மாணவ - மாணவியருக்கு பாலின பேதமின்றி ஒரே மாதிரியான ஆடை வழங்கப்பட்டிருக்கிறது. இது இணையத்தில் பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுவருகின்றது.

இப்பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர்கள் அனைவருமே, மேல் சட்டையும் - 3/4 நீளமுள்ள (முக்கால்) பேண்ட்டும் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஸ்கிர்ட் - பினோஃபார்ம் - சுடிதார் என பெண் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஆடை அறிவுறுத்தல்கள் பள்ளி தரப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. பேண்ட் - ஷர்ட் என மாணவர்களின் ஆடையை போலவே மாணவிகளின் ஆடையும் அமைந்திருப்பதன் மூலம், மாணவிகள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி, சுதந்திரமாக நடக்கலாம்; அமரலாம்; ஓடி ஆடி விளையாடலாம் என பள்ளி நிர்வாகம் மகிழ்வுடன் தெரியப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கம் 2018ம் ஆண்டே அப்பள்ளியில் அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுதான் இது ஊடக வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. 2018-ல் இத்திட்டத்தை அங்கு அறிமுகப்படுத்தியிருந்த அன்றைய முதல்வர் ராஜி இதுகுறித்து தற்போது பேசியிருக்கிறார். அவர் தெரிவிக்கையில், “எங்கள் பள்ளியில் பாலின சமத்துவம் குறித்து பேசுகையில், பல விஷயங்கள் பள்ளிக்குள்ளேயே செயல்படுத்தப்பட வேண்டியதாக இருப்பது எங்களுக்கு புரிந்தது. குறிப்பாக மாணவ மாணவியர் மத்தியிலான ஆடைக்கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகள். அதுகுறித்து நிறைய யோசிக்கையில், அக்கட்டுப்பாடு மற்றும் அறிவுரைகளால், பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதை நாங்கள் உணர்ந்தோம்.

குறிப்பாக ஸ்க்ர்ட் அணிகையில் பெண் குழந்தைகள் கூடுதல் சிரமத்துக்கும், சிக்கலுக்கும் உள்ளாகின்றனர். அவர்கள் சற்றே சுதந்திரமின்றி, ஆடை விலகிவிடுமோ என்ற ஐயத்துடனும் எண்ணத்துடனும் கவனத்துடனேயே இருப்பதை அறிந்தோம். ஆகவே அந்த நடைமுறையை மாற்ற முடிவு செய்து, குழந்தைகளின் பெற்றோருடன் கலந்துரையாடினோம். 90% பெற்றோர், எங்களுக்கு ஆதரவு தெரிவித்து, எங்கள் முடிவை வரவேற்றனர். இப்போது இது வெளியுலகத்துக்கு தெரியவந்து, பேசுபொருளாக மாறியிருப்பது, எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. பாலின வகுப்பெடுக்கும் பள்ளிகள் அனைத்தும் இதுகுறித்து யோசிக்க வேண்டுமென்பது, என் விருப்பம்” எனக்கூறியுள்ளார்.

பள்ளியின் தற்போதைய முதல்வர் சுமா, “இந்த பாலின சமத்துவ சீருடை கலாசாரத்தால் எங்கள் பள்ளி குழந்தைகள் அனைவரும், மனதளவில் பேதங்களை தவிர்த்து பழகுகின்றனர். மாணவியர் எவ்வித முன்யோசனையுமின்றி சுதந்திரமாக நடக்கவும், ஓடி ஆடி விளையாடவும் முடிகிறது. மாணவர்களும் மாணவிகளும் சம அளவில் சுதந்திரம் தரப்பட்டு வளர்க்கப்படவேண்டுமென்பதே எங்கள் நோக்கம்” என பெருமையுடன் கூறியுள்ளார்.

பள்ளியின் இந்த முயற்சி, பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்றுவருகிறது. ஆம், குழந்தைகளிலென்ன ஆண் - பெண் பேதம்? குழந்தைகளை பாலின பேதமின்றி குழந்தைகளாகவே இருக்க விடும்போதுதானே வருங்காலத்தில் நல்ல சமூகம் உருவாகும்! 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com